பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/501

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

486

நாடக மேடை நினைவுகள்


ஏட்டுப் பிரதியைக் கொண்டு, அநேக சபையார்களும் சங்கத்தார்களும் இதை ஆடியதை எடுத்துக் கூறுவேன்.

அன்றியும், இவ்வருஷம் சென்னை கவர்னர் அவர்கள் பார்க்கும்படி பாங்க் வெடிங் ஹாலில் யுத்த பண்டுக்காக ஏற்படுத்திய வினோதக் காட்சியில், என்னுடைய ‘சபாபதி’ நாடகத்தின் ஒரு பாகமும், “பிரமேளா” எனும் தெலுங்கு நாடகத்திலிருந்து ஒரு காட்சியும் ஆடப்பட்டது.

இவ்வருஷம் எங்கள் சபை திருநெல்வேலிக்குப் போய் எட்டு நாடகங்கள் அங்கே நடத்தியது. இவ்வூருக்குப் போனபோது, பாளையங்கோட்டை பாலத்தருகிலுள்ள எட்டையாபுரம் ராஜா அவர்களுடைய பங்களாவில் தங்கியிருந்தோம். இங்கிருந்து நாடகத் தினங்களிலெல்லாம் இரண்டு மைல் கடந்து திருநெல்வேலி - டவுனுக்கு வரவேண்டியிருந்தது. இருந்தும் எட்டையாபுரம் ஜமீன்தார் அவர்களுடைய சிறிய தகப்பனார் (பிறகு இவர் பட்டத்துக்கு வந்தார்), எங்களுடன் இருந்து எங்களுடைய சௌகர்யங்களை யெல்லாம் மிகவும் கவனித்து வந்தார். இவர், எங்கள் சபையின் நாடகங்களில் அவ்வளவு அபிமானமுடையவராயிருந்தார். எங்கள் சபையின் அங்கத்தினராகவும் சேர்ந்தார். நாங்கள் ஒத்திகை செய்யும் பொழுதெல்லாம் எங்களுடனேயேயிருப்பார். சாப்பிடுகிற வேளை தூங்குகிற வேளை தவிர, மற்றக் காலமெல்லாம் எங்களுடனேயே கழிப்பார். ‘மனோஹரன்’ நாடகக் கதையைப்பற்றி எந்நேரமும் நான் லஜ்ஜைப்படும்படி, என் முன்னிலையிலேயே அதிகமாகப் புகழ்ந்து பேசுவார்; அந்நாடகத்தில் அவருக்கு அவ்வளவு பிரீதி.

இவ்விடத்தில் முதல் மூன்று நாடகங்கள் செம்மையாக நடந்தன. கூட்டமும் அதிகமாக வந்தது. நான்காவது நாடகம் ‘லீலாவதி சுலோசனா’ வைத்துக்கொண்டோம். மறுநாள் நாடகம் என்றிருக்க, முந்திய தினம் நாங்கள் எல்லாம் சாப்பிட்டுவிட்டு வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்த பொழுது, திடீரென கோடைக் காலத்தில் இடி விழுந்தாற் போல், சென்னையிலிருந்து, எனது ஆருயிர் நண்பர் ரங்கவடி வேலுவுக்கு அவர் தங்கை மரணாவஸ்தையிலிருப்பதாகத் தந்தி வந்தது! இன்னது செய்வதென்று தோன்றாத-