பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/502

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

487


வனாய்த் திகைத்துப் போனேன். ஆயினும் யாவும் அவன் பாரம் என்று, பரமேஸ்வரன் பேரில் பாரத்தைச் சுமத்தி என் மனத்தை ஒருவாறு தேற்றிக் கொண்டு, நாம் செய்ய வேண்டிய கடமையை முதலில் செய்வோம். பிறகு மற்ற விஷயங்களைப்பற்றி யோசிப்போம் என்று தீர்மானித்தவனாய், உடனே ரங்கவடிவேலுவைப் பிரயாணப்படுத்தி சென்னைக்கு அனுப்பிவிட்டு, எங்கள் பங்களாவிற்கு வந்து சேர்ந்து, எனது ஆக்டர்களையெல்லாம் வரவழைத்து, நாங்கள் இரண்டு பெயரும் ஆக்டு செய்யாவிட்டாலும், அதன் பொருட்டு நாடகம் நின்று விடலாகாதென்று சொல்லி, என் பாகத்தை டாக்டர் ஸ்ரீனிவாசராகவாச்சாரிக்குக் கொடுத்து, ரங்கவடிவேலுவின் பாகத்தை எம். ராமகிருஷ்ண ஐயருக்குக் கொடுத்து அவர்களைப் படிக்கச் செய்தேன். அவர்களும் தங்களாலியன்ற அளவு செய்வதாக ஒப்புக்கொண்டு, கஷ்டப்பட்டு தங்கள் பாடங்களைப் படித்து, மறுநாள் நடித்தார்கள். இதைப்பற்றி நான் சற்று விவரமாய் இங்கு எழுதியதற்கு அநேகம் காரணங்களுண்டு; முதலாவது, என் அனுபவத்தில் அநேக சபைகளில், ஒரு நாடகம் நடத்துவதாக விளம்பரம் செய்த பிறகு, “ஒரு ஆக்டர் வரவில்லை, அரை ஆக்டர் வரவில்லை” என்று போக்கைச் சொல்லி, நாடகத்தை நிறுத்தியிருக்கிறதைப் பார்த்திருக்கிறேன். அப்படிச் செய்தல் தவறு என்பது என் துணிபு. எந்த ஆக்டர் வர அசந்தர்ப்பப்பட்டாலும் ஒருமுறை தீர்மானித்தபின், அந்நாடகத்தை ஆடியே தீருவது ஒழுங்காகும். லீலாவதி சுலோசனா ஒரு பெரிய நாடகம்; அதில் ஸ்ரீதத்தன் வேடமும், சுலோசனையின் வேடமும் மிகவும் முக்கியமானவை என்பதை அந்நாடகத்தை வாசித்தவர்களும் படித்தவர்களும் நன்றாய் அறிவார்கள்; அப்படியிருக்க 24 மணி நேரத்திற்குள்ளாக, அவ்விரண்டு ஆக்டர்களைத் தயார் செய்யச் சாத்தியமானபோது, மற்ற நாடகங்களிலும் யாராவது ஆக்டர்கள் வராமற் போனால், மற்றவர்களைக் கொண்டு கண்டக்டர்கள் ஏன் நடத்தக் கூடாது? இரண்டாவது, எனது நண்பர்களாகிய ஸ்ரீனிவாச ராகவாச்சாரியும் எம். ராமகிருஷ்ண ஐயரும், அவ்வளவு குறுகிய காலத்தில் அவ்விரண்டு பாத்திரங்களையும் படித்து நடிக்கச் செய்ததற்கு முக்கியமான அநுகூலமாயிருந்தது,