பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/503

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

488

நாடக மேடை நினைவுகள்


அவர்களிருவரும் - நானும் ரங்கவடிவேலும் அப்பாத்திரங்களைப் பன்முறை மேடையின்மீது நடித்த போதெல்லாம், அருகிலிருந்து எங்களை அவர்கள் கவனித்து வந்ததேயாம் என்பதற்குத் தடையில்லை. இவ்வாறு அவ்விருவர்களும் கவனித்து வந்ததன் பயனாகத் திடீரென்று அப்பாத்திரங்களை அவர்கள் நடிக்க வேண்டி வந்தபொழுது, தைரியமாய் அப்பாத்திரங்களை அவர்கள் எளிதிற் கற்று நடிக்கச் செய்தது. இதனால் இதை வாசிக்கும் - நாடக மேடையில் பெயர் பெறவேண்டும் என்று விரும்பும் எனது இளைய நண்பர்கள் அறிய வேண்டியதென்னவென்றால், மற்றவர்கள் நடிக்கும்பொழுது, நாம் அவர்களைக் கவனிப்பதனால் மிகவும் லாபமுண்டென்பதேயாம். மூன்றாவது, நாம் நடிப்பதற்கில்லையென்று அன்றைத்தினம் நாடகத்தை நான் எளிதில் நிறுத்தியிருக்கக்கூடும். எப்படியாவது நாடகம் தடைபடலாகாது என்று நான் வற்புறுத்தியிராவிட்டால், நாடகம் நடந்திராது வாஸ்தவமே. ஆயினும் அப்படி என் சுய நன்மையைப் பாராட்டி நான் நிறுத்தியிருந்தால் என்னவாயிருக்கும்? சபைக்குப் பெயர் நஷ்டமும் பண நஷ்டமும் உண்டாயிருக்கும். அன்றைத்தினம் ஆயிரம் ரூபாய்க்குமேல் வசூலானது வந்திராது; அன்றியும் அக்கம் பக்கத்திலிருந்து அநேக ஜனங்கள் வந்திருந்தவர்களெல்லாம், அன்று நாடகமில்லை யென்று அறிந்து திரும்பிப் போயிருப்பார்களானால், மற்றொரு நாள் நாடகம் என்று பிரசுரம் செய்தால், அன்றைத்தினம் போல் இன்றும் நிறுத்திவிடுகிறார்களோ என்னவோ என்று மனஞ்சலித்து வராமலிருந்தாலுமிருப்பார்கள்; எங்கள் சபையின் நற்பெயரும் கெட்டிருக்கும். சுகுண விலாச சபையார் ஒரு முறை நாடகம் என்று பிரசுரம் செய்தபின், என்ன இடையூறுகள் வந்தபோதிலும், என்ன மழை இடியாயிருந்தபோதிலும், எப்படியும் ஆடித்தான் தீர்ப்பார்கள் என்கிற பெயர் நிலைத்திராது. ஆகவே இவ்விஷயத்தை நாடகக் கம்பெனித் தலைவர்களும் நாடக சபை கண்டக்டர்களும் சற்றே கவனிப்பார்களாக.

அன்றையத் தினம் நாடக ஆரம்பத்திற்குமுன், வேஷம் தரிக்கும் இடத்தில் எந்நேரமும் எனக்கு ரங்கவடிவேலுவின் ஞாபகமே வந்துகொண்டிருந்தபடியால், ஜனங்கள் உட்காரு-