பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/504

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

489


மிடத்திற் போயிருந்தால், கொஞ்சம் இந்த வருத்தத்தை மறந்திருக்க முடியுமென்று எண்ணினவனாய் அங்குப் போனேன். வெளியிற் போனவுடன் எனக்கு மற்றொரு சங்கடம் நேர்ந்தது. அங்கு நாடகத்தைப் பார்க்க வருபவர்களுக்கெல்லாம், இவர் இன்று நாடகமாடவில்லையா என்று கேட்க ஆரம்பித்தனர். உலையிலிருந்து எரியில் வீழ்வது போல் இதென்ன பெருங் கஷ்டமாய் முடிந்ததென வெண்ணி, திரும்பி நாட மேடைக்குள்ளே போய்ச் சேர்ந்தேன். அன்றைத்தினம் அ. கிருஷ்ணசாமி ஐயர் லீலாவதியாக நன்றாய் நடித்த போதிலும், அநேகர் எனதுயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு சுலோசனையாக நடிக்க வில்லையே யென்று குறை கூறியதாகக் கேள்விப்பட்டேன். புதிதாய் நாடகப் பாத்திரங்கள் எடுத்துக்கொண்ட ஸ்ரீனிவாசராக வாச்சாரிக்கும், எம். ராமகிருஷ்ண ஐயருக்கும், அவர்கள் பாகத்தைச் புராம்ட் செய்வதில் கவனத்தைச் செலுத்தினவனாய், ரங்கவடிவேலு இல்லாத குறையை மறந்திருந்தேன். நாடகம் பூர்த்தியானவுடன், எப்படியாவது சபையின் பெயர் கெடாமல், மற்றவர்களைக் கொண்டு நாடகத்தைப் பூர்த்தி செய்து வைத்தோமேயென்று சந்தோஷப்பட்டேன். இருந்தபோதிலும் இதைத்தான் ஒருவாறு முடித்தோம், இன்னும் நடத்தவேண்டிய இரண்டு மூன்று நாடகங்களுக்கு ரங்கவடிவேலு இல்லாமல் என் செய்வது என்னும் திகில் என் மனத்தில் குடிகொண்டது.

மறுநாள் எனது நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயர் எழுதிய “பீஷ்மர் ஜனனம்” என்னும் நாடகத்தை நடத்தினோம். இதில் ரங்கவடிவேலுவுக்குப் பாத்திரம் ஒன்றுமில்லாத படியால், கஷ்டமில்லாமற் போயிற்று. ஆயினும் இந்நாடகத்திற்கு ஜனங்களே வரவில்லை. முப்பது நாற்பது ரூபாய்தான் வசூலாயது! ரங்கவடிவேலு இல்லாத குறையின் அளவை அப்பொழுதுதான் எங்கள் சபையோரும் நானும் அறிந்தோம். இன்றைத்தினம் நாடக ஆரம்பத்தில், திருச்சிராப் பள்ளியில் காலவ ரிஷி நாடகமாடும் ஆக்டர்களெல்லாம் தளர்ந்த மனமுடையவர்களாய், நான் என்ன சொல்லியும் கேளாமல், ஒன்று பாதியாக நாடகத்தை ஆடி முடித்தனர். போதாக்குறைக்கு அன்று இரவு நெல்வேலியப்பர் கோயிலில் ஐந்தாம் நாள் ரிஷபவாகன உற்சவம்; கோயில்