பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/505

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

490

நாடக மேடை நினைவுகள்


அதிகாரிகளில் சிலர் எங்களுக்குத் தெரிந்தவர்களாயிருந்த படியால் ஓரிடத்தில் சுவாமியை நிறுத்தி வைத்து, தரிசனத்திற்காக எங்களை யெல்லாம் வரும்படி சொல்லியனுப்பினர். இதைக் கேட்டவுடன் சாதாரணமாக மூன்றரை நான்கு மணி நேரம் பிடிக்கும் நாடகத்தை 2 மணி நேரத்திற்குள் முடித்துவிட்டார்கள்; எனக்கு நகைப்பையும் வருத்தத்தையும் உண்டு பண்ணின ஒரு சமாச்சாரத்தை இங்கெழுதுகிறேன். தாசராஜனுடைய மகளாகிய பரிமளகந்தியை சந்தனு மணக்கும் காட்சியானது, சாதாரணமாகக் குறைந்த பட்சம் பத்து நிமிஷமாகும். இதை தாசராஜனாக வேஷம் பூண்ட எம். துரைசாமி ஐயங்கார் ஒரு நிமிஷத்தில் முடித்துவிட்டார் ஓ! காட்சி ஆரம்பித்தவுடன், தாசராஜன் ஒரு சேவகனைப் பார்த்து, “அடே பூமாலையைக் கொண்டுவாடா” என்று கட்டளையிட்டு, அதை வாங்கித் தன் மகள் கையில் கொடுத்துச் சந்தனு கழுத்திற் போடச் செய்து, காட்சியை முடித்துவிட்டார்! படுதா இறங்கியவுடன் “இது, என்ன துரைசாமி, இப்படிச் செய்தாயே!” என்று கேட்க, “எல்லாம் இவ்வளவு போதும் வந்திருக்கும் ஜனங்களுக்கு” என்று பதில் கூறினார். அதைக் கேட்டபோது, எனக்கு நகைப்பு அதிகமாயிருந்ததோ துக்கம் அதிகமாயிருந்ததோ சொல்ல அசக்தனாயிருந்தேன்! உடனே ஆக்டர்களெல்லாம் வேஷங்களைக் களைந்துவிட்டு, மாட வீதிக்குப்போய் ஸ்வாமி தரிசனம் செய்தோம். அப்பொழுது என் வழக்கப்படி நெல்வேலியப்பரை ஸ்தோத்திரஞ் செய்துவிட்டு, முடிவில், “என் அப்பா, எங்கள் சபையின் பெயர் இவ்வாறு கெடாவண்ணம் கடாட்சித்தருள வேண்டும் எப்படியாவது” என்று பிரார்த்தித்தேன்.

மறுநாள் காலையில் நான் துயில் நீத்து எழுந்தவுடன் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு சென்னையிலிருந்து மறுபடியும் திருநெல்வேலிக்கு வருவதாகத் தந்தி வந்தது. இதற்கு முன்பாக ரங்கவடிவேலு இல்லாத்தால் நேர்ந்த கஷ்டங்களையெல்லாம் எடுத்து எழுதி என் தமயனார் ஆறுமுக முதலியாருக்கு, எப்படியாவது ரங்கவடிவேலுவின் சகோதரிக்குச் சஞ்சயனம் முடிந்ததும், மறுபடி திருநெல்வேலிக்கு வரும்படியாகப் பிரயத்தனம் செய்து பாருங்கள் என்று ஒரு நிருபம் அனுப்பியிருந்தேன். அதன்மீது அவர்,