பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/506

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

491


தன் மாமனாராகிய திவான்பஹதூர் ராஜரத்தின முதலியார் மூலமாக, ரங்கவடிவேலுவின் நெருங்கின பந்துக்களுக்குச் சொல்லி, நடந்தது நடந்து விட்டது அதற்காக வருத்தப் பட்டுக்கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம்? ரங்கவடி வேலு போகாததால் ஒரு சபையின் காரியங் கெட்டுப்போய் விடலாகாது. இதில் தவறொன்மில்லை, சஞ்சயனம் ஆனவுடன் ரங்கவடிவேலு மறுபடி திருநெல்வேலிக்குப் போகலாம் என்று சொன்னாராம். அதன்மீது தனது பந்துக்களும் ஒப்புக்கொள்ள, ரங்கவடிவேலு மறுநாள் நெல்வேலிக்குப் போவதாகத் தந்தி கொடுத்தார்.

இங்ஙனம் நேர்ந்தது தெய்வாதீனம், தெய்வ கடாட்சம் என்று நினைக்கிறேன்; நெல்வேலியப்பர் என் பிரார்த்தனைக் கிணங்கி இவ்வாறு செய்தார் என்று நான் உறுதியாய் நம்புகிறேன். இதை வாசிக்கும் நண்பர்களில், யாராவது நாஸ்திகர்களாயிருந்தால் அவர்கள் இதைப்பற்றி “என்ன மூட புத்தியுடையவனாயிருக்கிறான் இவன்” என்று நகைக்கலாம். அப்படிச் செய்வார்களாயின், அவர்கள் மீது நான் குறை கூறமாட்டேன். ஆயினும், என் தீர்மானத்தை நான் விடமாட்டேன்! ஜகதீசனைக் குறித்துப் பிரார்த்திக்கும் விஷயத்தில், டெனிசன் என்னும் பெயர்பெற்ற ஆங்கிலக் கவி, இவ்வுலகமானது கனவிலும் கருதாத பல விஷயங்கள் பிரார்த்தனையினால் முடிவு பெறுகின்றன என்று எழுதியிருக்கிறார். அதை உறுதியாய் நம்புவோர்களில் நான் ஒருவன்.

ரங்கவடிவேலு திருநெல்வேலி வந்து சேருமுன் மற்றொரு நாடகம் நடத்தினோம். அதாவது ‘நற்குல தெய்வம்’ என்பதேயாம். இதற்கும் வரும்படி மிகவும் குறைவாகவிருந்தது. “ரங்கவடிவேலு இல்லாத குறைதானோ இப்படி ஜனங்கள் வராதது?” என்று சந்தேகித்த சிலருடைய சந்தேகமும் இந்த இரண்டாவது நாடகத்தினால் அறவே நீங்கியது.

எனதுயிர் நண்பர் வந்து சேர்ந்த பின், “வேதாள உலகம்” என்னும் நாடகத்தை வைத்துக் கொண்டோம். அதற்கு ஜனங்கள் அதிகமாய் வந்திருந்தனர். பண வசூலும் அதிகமாயிருந்தது; நாடகமும் நன்றாய் இருந்ததெனப் புகழ்ந்தனர். சிலர் இந்நாடகத்தை மறுபடியும் இவ்விடம்