பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/507

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

492

நாடக மேடை நினைவுகள்


ஆடவேண்டுமென்றும் கேட்டனர். ஆயினும் இதைவிட “லீலாவதி-சுலோசனா” நாடகத்தில் ரங்கவடிவேலு சுலோசனையாக நடிப்பதைப் பார்க்க வேண்டுமென்று, அதிக நாடக அபிமானிகள் விரும்புகின்றனர் என்பதைக் கேட்டறிந்தவர்களாய், எங்கள் நிர்வாக சபைக் கமிட்டியார் அதையே மறு சனிக்கிழமை போட வேண்டுமென்று தீர்மானித்தனர். இதனிடையில், பதினொரு நாடகங்களுக்கு ஏழு நாடகங்கள் நடத்திய எங்கள் ஆக்டர்களுக்குச் சிரமபரிஹாரமாகவும், ரங்கவடிவேலு தன் துயரத்தைச் சற்று மறந்திருக்கக் கூடுமென்றும் யோசித்து எங்கள் சபை ஆக்டர்களை யெல்லாம், குற்றாலத்திற்கு அழைத்துக் கொண்டு போக ஏற்பாடு செய்தேன். அவ்வாறே திருக்குற்றாலம் சென்று, அங்கு நீர் விழும் அருவியில் எல்லோரும் பன்முறை ஸ்நானம் செய்து, கோயிலுக்குப் போய் ஸ்வாமி தரிசனம் செய்து, அங்கு மலைக்காட்சிகளை யெல்லாம் சுற்றிப்பார்த்து இரண்டு தினம் கழித்தோம். நாடக தினம் சாயங்காலம்தான் திருநெல்வேலி வந்து சேர்ந்தோம். அன்றிரவு, ஒரு வாரத்துக்கு முன் தான் ஆடிய நாடகமாயிருந்தபோதிலும், மறுபடியும் நாடகக் கொட்டகை நிரம்ப ஜனங்கள் வந்திருந்தனர்; சற்றேறக்குறைய 800 ரூபாய் வசூலாயது. வந்திருந்தவர்களெல்லாம் நாடகத்தை மிகவும் மெச்சினர்.

மறுநாள் திருநெல்வேலி வாசிகள் எங்கள் சபையாருக்கு ஒரு விருந்தளித்தனர். பிறகு சென்னபட்டணம் வந்து சேர்ந்தோம். இம்முறை திருநெல்வேலியில் நாடகமாடினதன் வரும்படியில் செலவுபோக நிகரம் ரூபாய் 673-3-7. எங்கள் கட்டட பண்டுக்குச் சேர்த்தோம். இதன்றி நாங்கள் இங்கு நாடகம் நடத்தியதன் பலனாக எங்கள் சபையைப் போன்ற ஒரு சபை இங்கும் சீக்கிரம் ஸ்தாபிக்கப்பட்டது. இதற்கு எங்கள் சபையின் பெயரை ஒட்டி சற்குண விலாச சபை என்றே பெயர் வைத்தனர். இதன் முக்கிய ஆக்டர் ஸ்ரீமான் சுப்பராயலு நாயுடுவின் விடாமுயற்சியினாலும் ஊக்கத்தினாலும், அச்சபை இன்றளவும் வளர்ந்தோங்கி வருகிறது; இச் சபையார் பெரும்பாலும் நான் எழுதிய நாடகங்களையே ஆடி வருகின்றனர்.