பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/508

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

493



இவ்வருஷம் எங்கள் சபையானது மொத்தத்தில் 50 நாடகங்கள் ஆடியது; இதற்கு முந்தியும் இத்தனை நாடகங்கள் ஒரே வருஷத்தில் ஆடியதில்லை; இதற்குப் பிந்தி ஒரு வருஷந்தான் இந்த எண் மீறப்பட்டது. தமிழில் மாத்திரம் 31 நாடகங்கள் ஆடினோம். இதை வாசிக்கும் எமது சபை அங்கத்தினருட் சிலர், தற்காலம் இரண்டு மூன்று நாடகங்கள் கொடுப்பதே கஷ்டமாயிருக்கிறதே யென்று, கொஞ்சம் பொறாமை கொள்ளக்கூடும். டிசம்பர் மாத விடுமுறையில், எங்களுக்கு விக்டோரியா பப்ளிக் ஹால் மேல் மாடி கிடைக்காதபடியால், நாங்களிருக்கும் கீழ் ஹாலிலேயே, ஒரு அரங்கம் ஏற்படுத்தி, அதில் 10 நாடகங்கள் ஆடினோம். இந்தச் சிறிய அரங்கத்தில் முக்கோடி ஏகாதசியன்று “காதலர் கண்கள்” என்னும் நாடகத்தை நடத்தினோம். இதைப்பற்றிய சிறு கதையொன்றுண்டு. முக்கோடி ஏகாதசியன்று என்ன நாடகம் போடுவது என்று எங்கள் நிர்வாக சபையில் பேச்சு வந்தபொழுது, எனது நண்பர் சத்யமூர்த்தி ஐயர் அவர்கள் “எந்த நாடகமாவது சம்பந்தம் போடட்டும். சாரங்கதரா நாடகம் மாத்திரம் வேண்டாம்” என்று சொன்னார். “அப்படியே ஆகட்டும்” என்று தலையசைத்து, சாரங்கதர நாடகத்தைவிடச் சிருங்கார ரசமதிகமாயுள்ள “காதலர் கண்கள்” என்னும் நாடகத்தைப் போட்டேன்! அக்காலம் எனக்கு நாற்பத்திரண்டு வயதாகியும் பால்யக் குறும்பு என்னை முற்றிலும் விட்டகலவில்லை போலும்!

எங்கள் சபையின் அங்கத்தினரெல்லாம் வந்தாலே இடம் போதாத இச்சிறிய அரங்கசாலையில், எப்படி நமக்குப் பணம் வசூலாகும் என்று பலர் சந்தேகித்தனர்; ஆயினும், இங்கு நடத்திய நாடகங்களில் செலவுபோக ரூபாய் 500 கட்டிட பண்டுக்குச் சேர்த்தோம். நாடகங்கள் எங்கு ஆடினாலும் என்ன, ஜனங்களை ஆகர்ஷிக்கும் சக்தி ஆக்டர்களிடம் இருக்கையில், எங்கும் வந்து சேர்வார்கள்; பழுத்த பழங்கள் நிறைந்திருக்கும் மரத்திற்குப் பட்சிகள் தாமாகப் போய்ச் சேருகின்றன.

1916ஆம் வருஷம் எங்கள் சபையின் சரித்திரத்தில் ஒரு முக்கியமான வருஷமாம். ஏனெனில், இவ்வருஷம் சபை ஆரம்பித்து 25 வருஷங்கள் பூர்த்தியானபடியால், சபையின் “சில்வர் ஜூபிலி” கொண்டாட்டம் நடைபெற்றது.