பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/509

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

494

நாடக மேடை நினைவுகள்


இக்கொண்டாட்டத்தை இந்தியன் ஆத்லடிக் அசோசியேஷன் மைதானத்தில் ஒரு பெருங்கொட்டகையில் நடத்தினோம். மாட்சிமை தங்கிய சென்னைக் கவர்னர் அக்கிராசனாதிபதியாக விஜயம் செய்தார். சென்னையிலுள்ள சீமான்களையும் சீமாட்டிகளையும் வரவழைத்தோம். சபையின் “முற்கால நிலை, தற்கால நிலை, பிற்கால நிலை” என்பதைப் பற்றி ஒரு வியாசம் எழுதி, அதை நான் வாசித்தேன். பிறகு, தெலுங்கு இங்கிலீஷ் தமிழ் நாடகங்களில், சில காட்சிகளை ஆடினோம்.

இவ்வருஷம் எங்கள் சபையின் பிரசிடெண்டாகவிருந்த டி.வி. சேஷகிரி ஐயர் அவர்கள் ஐகோர்ட்டு ஜட்ஜாக நியமிக்கப்பட்டபடியால் அவருக்குச் சபையில் ஒரு விருந்தளித்தோம். அவர் அதற்காக சபையோருக்கு வந்தனம் அளித்த பொழுது கூறிய ஒரு வேடிக்கையான சமாச்சாரத்தை இங்கெடுத்தெழுத விரும்புகிறேன். “யாருக்காவது ஹைகோர்ட்டு ஜட்ஜாக வேண்டுமென்று விருப்பமிருந்தால், அவர்களை சுகுண விலாச சபையைச் சேரும்படி நான் கேட்பேன். காலஞ்சென்ற பி. கிருஷ்ணசாமி ஐயர் சபையின் அங்கத்தினரானார்; உடனே ஹைகோர்ட்டு ஜட்ஜானார். பிறகு பி.ஆர். சுந்தர ஐயர், சபையைச் சேர்ந்தார்; உடனே ஹைகோர்ட் ஜட்ஜானார். குமாரசாமி சாஸ்திரியாரும் கே. ஸ்ரீனிவாச ஐயங்காரும் அப்படியே! அவருக்குப் பிறகு நான் வந்தேன்; எனக்கும் இப்பதவி கிடைத்தது! ஆகவே உங்களுள் யாருக்காவது உயர்ந்த உத்யோகம் வேண்டுமென்றால், சுகுண விலாச சபையைச் சேருங்கள்!” என்று வேடிக்கையாய்க் கூறினார். அவர் கூறியது ஒருவிதத்தில் உண்மையே; பிறகு ஹைகோர்ட்டு ஜட்ஜுகளாகிய, கனம் சி.கிருஷ்ணன், வெங்கடசுப்பராவ், ராமேசம், மாசிலாமணிப் பிள்ளை முதலியோரும் ஒருக்கால் சுகுணவிலாச சபையின் அங்கத்தினராயிருந்தவர்களே!

இவ்வருஷம் மாட்சிமை தங்கிய சக்கரவர்த்தியின் பிறப்பு நாள் கொண்டாட்டத்தில், கௌரவப் பட்டம் அளிக்கும்பொழுது, எனக்கு ராவ் சாஹிப் என்கிற பட்டம் கொடுக்கப்பட்டது. இது போன்ற பட்டங்களைப் பெற அநேகர் பெரும் பிரயத்தனப்படுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆயினும் நான் இதன்பொருட்டு ஒரு பிரயத்தனமும்