பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/510

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

495


எடுத்துக் கொள்ளவில்லையென்பதை நம்பும்படி என் நண்பர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன். கெஜட்டில் இந்த விளம்பரம் வந்தபொழுது நான் கொழும்பில் நாடகமாடிக் கொண்டிருந்தேன். இதில் எனக்கு அதிகத் திருப்தியைத் தந்தது என்னவெனில், எனது பந்துக்களுக்கும் நண்பர்களுக்கும் இது சந்தோஷத்தைத் தந்ததேயாம். அன்றியும் இதை எங்கள் சபைக்குச் செய்த ஒரு கௌரவமாகக் கொண்டேன். எனக்கு இப்பட்டம் கொடுத்தைப்பற்றி, மதராஸ் டைம்ஸ் என்னும் அக்காலம் பிரசுரிக்கப்பட்டுவந்த தினசரிப் பத்திரிகையில் அதன் பத்திராதிபராகிய கிளின்பார்லோ என்பவர், நான் தமிழ் நாடகத்திற்காக எடுத்துக்கொண்ட சிரமத்தைப்பற்றி ஏதோ (நான் எண்ணுகிறபடி அதிகமாய்) புகழ்ந்து பேசி, எனக்குப் பட்டம் கொடுத்தது, தமிழ் நாடகத்திற்கே ஒரு கௌரவமாகும் என்று கூறி, கடைசியில் “தற்காலம் இங்கிலாந்தில் வருஷா வருஷம் கௌரவப் பட்டங்கள் கொடுக்கும்பொழுதெல்லாம், சிறந்த நாடகமாடுபவர்களுக்கும், ‘சர்’ என்கிற பட்டம் கொடுப்பது வழக்கமாயிருக்கிறது. இந்தியா தேசத்திலும் இவ்வாறு வழக்கம் ஆரம்பித்தது சிலாகிக்கக்தக்கதே” என்று எழுதியுள்ளார். அவர் ஆங்கிலத்தில் எழுதியதை நான் தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். இவர் மாத்திரமன்று; இதைப் பற்றி எழுதிய ஒவ்வொரு பத்திராதிபரும் நான் சுகுண விலாச சபைக்காக உழைத்ததைப்பற்றிப் புகழ்ந்தெழுதினார்கள். இப்பட்டத்தின் சன்னதை எனக்குச் சென்னைக் கலெக்டர் அவர்கள் தர்பாரில் கொடுத்தபொழுது, சுகுண விலாச சபைக்காகவும் தமிழ் நாடகத்திற்காகவும் நான் உழைத்ததைப்பற்றி எடுத்துப் பேசியதுதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. எனக்குத் தெரிந்தவரை இந்தியாவில் நாடக சம்பந்தமாக ஒருவருக்குப் பட்டப் பெயர் கொடுத்தது இதுதான் முதன்முறை என்று எண்ணுகிறேன்.

இவ்வருஷம் சபையின் 25ஆம் ஆண்டு நிறைவேறிய கொண்டாட்டத்திற்கேற்றபடி 52 நாடகங்கள் ஆடினோம். இதில் இரண்டு நாடகங்கள், எங்கள் சபைக்காகப் பல வருஷங்களாக உழைத்து வந்த அ. கிருஷ்ணசாமி ஐயர் உதவிக்காக ஆடி, அவற்றின் வரும்படியாகிய ரூபா 863-12-0 அவருக்குக் கொடுத்தோம். மேற்கண்ட 52