பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/511

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

496

நாடக மேடை நினைவுகள்


நாடகங்களுள், 22 வெளியூர்களில் ஆடப்பட்டன. அவற்றைப் பற்றி சற்று விவரமாய் எழுத வேண்டியவனாயிருக்கிறேன்.

ஈஸ்டர் விடுமுறையாகிய ஆறு நாட்களில் நெல்லூருக்குப் போனோம். தெலுங்கு கண்டக்டராகிய டி. வெங்கடரமண ஐயர் சபையின் தெலுங்குப் பிரிவு இவ்வருஷம் தெலுங்குப் பிரதேசமாகிய நெல்லூருக்கும் போக வேண்டுமென்று ஏற்பாடு செய்தார். நான் ஒருவேளை இதற்கு ஏதாவது ஆட்சேபணை செய்வேன் என்று நினைத்தாரோ என்னவோ; அவர் என்னை இதைப்பற்றிக் கேட்டபொழுது, சுகமாய்ப் போய் வாருங்கள் என்று விடை கொடுத்தேன். அதன் பேரில் நெல்லூரில் நான்கு நாடகங்கள் கொடுக்க வேண்டுமென்று சபையில் தீர்மானிக்கப்பட்டது. அதன்மீது நெல்லூர்வாசிகளுக்குச் சபை அங்கு வருவதைப்பற்றி எழுதிய பொழுது அவர்களில் அநேகர் ரங்கவடிவேலுவையும் என்னையும் பார்க்க வேண்டுமென்று விருப்பமிருப்பதாகவும், அதன் பொருட்டுத் தமிழ் நாடகம் ஒன்றும் அங்கு ஆடவேண்டுமென்றும் தெரிவித்தார்கள். அப்படிப்பட்ட காகிதங்கள் சிலவற்றை நான் நேரில் பார்த்தேன். எங்கள் நிர்வாக சபையார், இதை யோசித்து, தமிழ் நாடகமொன்றும் இருக்க வேண்டுமென்று தீர்மானித்தார்கள். ஆகவே முடிவில், நான்கு தெலுங்கு நாடகங்களும், ஒரு தமிழ் நாடகமும் ஆடவேண்டுமென்று நிச்சயிக்கப்பட்டது. எனக்கு மாத்திரம் ஆரம்பமுதல் இப்பிரயாணத்தினால் சபைக்கு நஷ்டம் நேரிடுமென்றே தோன்றியது. ஆயினும் அதை வெளியிடுவேனாயின், சபையின் தெலுங்குப் பிரிவின்மீது ஏதோ விருப்பமில்லாதபடியால் இவன் இப்படிச் சொல்கிறான் என்று நினைக்கிறார்களோ என்று, சும்மா... இருந்துவிட்டேன். நெல்லூருக்குப் போவதைப் பற்றிச் சபையில் முதலில் பேச்சு வந்தபொழுதே, எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு “நாமும் போய் ஒரு தமிழ் நாடகமாடலாமே” என்று கேட்டார். அதற்கு நான் “நாமாக இதில் தலை நுழைத் துக்கொள்வது அழகல்ல. அன்றியும், இப்பிரயாணத்தினால் சபைக்கு நஷ்டம் வரும் என்று எனக்குள் ஏதோ சொல்கிறது. வேண்டாம், இதைப்பற்றிப் பிரஸ்தாபம்கூடச் செய்யாதே” என்று தடுத்தேன். அதன்பேரில் அவரும் சும்மா