பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/512

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

479


இருந்துவிட்டார். பிறகு அகஸ்மாத்தாக மேற்சொன்னபடி ஒரு தமிழ் நாடகமும் போட வேண்டுமென்று தீர்மானிக்கப் பட்டபொழுது, என்னுயிர் நண்பருக்கு மிகவும் சந்தோஷம்; எனக்கு மாத்திரம், இதனால் தெலுங்குப் பிரிவினர்க்கு மனஸ்தாபம் உண்டாகி எப்படி முடியுமோ என்று நிம்மதி இல்லாமலிருந்தது.

நெல்லூரில், எங்கள் சபை பிரசிடென்ட் சேஷகிரி ஐயர் அவர்கள் தமயனார் பங்களாவில் தங்கினோம். அவ்வூரில் லட்சுமிநரசா ரெட்டியார் டவுன் ஹாலில் நாடகங்கள் நடத்தினோம். முதல் நாடகம் “வரூதினி” என்பது. இது எனது நண்பர் ராமமூர்த்தி பந்துலுவால் தெலுங்கில் எழுதப்பட்டது; மனு சரித்திரக் கதையிலிருந்து எடுக்கப்பட்டது. சென்னையில் எங்கள் சபையார் இதைப் பன்முறை ஆடியிருக்கின்றனர்.

சென்னையில் இதை ஆடும்பொழுதெல்லாம் நல்ல வசூலாவது வழக்கம். இதில் எனது நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயர் மிகவும் நன்றாக வரூதினியாக நடிப்பார். கதாநாயகனாக நாடகாசிரியனாகிய ராமமூர்த்தி பந்துலு நடிப்பது வழக்கம்; அவர் மதுரைக்குப் போய் விட்டபடியால், அவருக்குப் பதிலாக எனது நண்பர் டாக்டர் டி. ஸ்ரீனிவாச ராகவாச்சாரியார் நெல்லூரில் நடித்தார். இது நெல்லூர் வாசிகளுக்குப் பிடிக்கவில்லை போலும். முதலில் நாடகம் பார்க்க வந்த ஜனங்கள் மிகவும் குறைவாயிருந்தது; இரண்டாவது வந்தவர்களில் அநேகர் என்னிடம் நன்றாயில்லை யென்று தெரிவித்தார்கள். இதற்குக் காரணம் என்னவென்று நான் விசாரித்ததில், ஸ்ரீனிவாச ராகவாச்சாரி ஆக்டு செய்வது நன்றாயிருந்த போதிலும், அவரது தெலுங்கு உச்சரிப்பு சரியாக இல்லை என்று பலர் கூறினர். என்னிடம் இவர்கள் கூறுவது வாஸ்தவம் என்று நான் ஒருவிதத்தில் ஒப்புக் கொள்ளவேண்டியவனாயிருந்தேன். சென்னையிலும் தெலுங்கு நாடகங்களில், தமிழர்கள் ஏதாவது பாத்திரங்களை எடுத்துக்கொண்டு நடிக்கும்போதெல்லாம். அவர்கள் ஆக்டு செய்வது எவ்வளவு நன்றாயிருந்தபோதிலும், தெலுங்கு பாஷை பேசுவது சரியாயில்லை என்று தெலுங்கு அபிமானிகள் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.