பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/513

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

498

நாடக மேடை நினைவுகள்


இவ்வூரில் இரண்டாவது நாடகமாக தெலுங்கில் “நந்தனார்” ஆடப்பட்டது. இதற்காக வேண்டி எம். துரைசாமி ஐயங்காரை, வேதியர் வேஷத்திற்காக வரவழைத்தோம். தெலுங்கில் “நந்தனார்” சென்னையில் ஆடும் பொழுதெல்லாம், ஜனக்கூட்டம் அதிகமாய் வருவது வழக்கம். ஆகவே இங்கும் அப்படி இருக்குமென எண்ணி தெலுங்கு கண்டக்டராகிய வெங்கட்ரமண ஐயர், இதைத் தேர்ந்தெடுத்தார். இங்கு நாடகமாடிய பொழுது எனக்கு ஞாபகமிருக்கிறபடி சுமார் 50 ரூபாய்தான் வசூலாயது! இதைக் கண்ட துரைசாமி ஐயங்கார் தான் பட்டணத்திலிருந்து வந்துபோகக் கொடுத்த ரெயில் சார்ஜுகூட ஆகாது போலிருக்கிறதே என்று துக்கப்பட்டார். அன்று டிக்கட்டுகள் வாங்க வந்த ஒரு தெலுங்கு மனிதர், நாடக விளம்பரத்தை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு அதில் “நந்தனார் சரித்திரமு” என்று அச்சிட்டிருப்பதைக் கண்டு “நந்தனார் ஏமிரா? நந்தனார்!” என்று நான் கேட்கும் படியாகக் கூறினார். பிறகு நான் விசாரித்ததில் சுத்த தெலுங்கில் நந்துடு என்று இருக்க வேண்டும் என்றும், நந்தனார் என்பது தமிழுக்குரிய தொடர் என்றும் சொன்னார்கள். ஆந்திர தேசத்தில் தங்கள் தேச பாஷையின்மீது அவ்வளவு அபிமானமுண்டு அத் தேசத்தாருக்கு; இது நான் தவறு என்று சொல்லமாட்டேன்.

இவ்விடம் மூன்றாவது நாடகம் “விஜயநகர ராஜ்யத்தின் அழிவு” என்பதை வைத்துக் கொண்டார் எங்கள் தெலுங்கு கண்டக்டர். இது கோலாசலம் ஸ்ரீனிவாசராவ் என்பவரால் எழுதப்பட்ட ஒரு மிகச் சிறந்த நாடகம். எனது நண்பர் பல்லாரி ராகவாச்சார்லு இதில் “பதான் ருஷ்தம்” என்னும் வேடம் தரிக்கும் போதெல்லாம், சென்னையில் தெலுங்கர்கள் ஒருவர் பாக்கியில்லாமல் வந்து பார்ப்பார்கள். தற்காலம் ஆந்திர நாடகங்கள் ஆடுவதில் இவரைவிடக் கீர்த்தி பெற்றவர்கள் இல்லை என்னும்படி அவ்வளவு பிரசித்தி வாய்ந்தவர். இவருக்கு இணையான தெலுங்கு ஆக்டரை நான் கண்டதேயில்லை. இனி என் ஆயுளில் காணப்போகிறதுமில்லையென்றே நினைக்கிறேன். எந்த வேஷம் தரித்தாலும், அந்தப் பாத்திரத்திற்கேற்றபடி சரியாக வேஷம் பூண்டு, அதை இப்படி நடிக்க வேண்டுமென்று முன்னதாகவே