பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/514

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப.சம்பந்த முதலியார்

499


தீர்க்காலோசனை செய்து, மிகவும் விமரிசையாக நடிப்பார். இவர் ஆடும் அநேக நாடகங்களில் இந்த ருஷ்தம் என்னும் பாத்திரமானது ஒரு மிகச் சிறந்ததென்பது என்னுடைய கொள்கை மாத்திரமல்ல, எல்லாத் தெலுங்கர்களுடைய கொள்கையுமாம். அன்றியும் இவர் தெலுங்கு நாட்டில் பிறந்து வளர்ந்து, “ஆந்திர நாடகப் பிதாமகன்” என்னும் பட்டப் பெயர் பெற்ற காலஞ்சென்ற கிருஷ்ணமாச்சாரியார் அவர்களுடைய நெருங்கிய பந்து. இப்படிப்பட்டவர் வந்து தெலுங்கர்கள் அதிகமாக வருவார்கள் என்று எங்கள் கண்டக்டர் நம்பியிருந்தார். இந்த நாடகத்திற்கும் முதல் தெலுங்கு நாகடத்தைவிடக் குறைவாக ஜனங்கள் வந்தார்கள்! ஜனங்கள் வராமற் போனாற் போகிறது; நாடகமாடியது நன்றாயிருந்ததென ஒருவனாவது சொல்ல வேண்டுமே! அதுவும் இல்லை. நாடக ஆரம்ப முதல் கடைசிவரை ஒரு கரகோஷமாவது கிடையாது! பாதி நாடகம் ஆடினபிறகு, எனது நண்பர் ராகவாச்சார்லு உள்ளே வேஷம் தரிக்கும் அறையில் நானிருக்குமிடம் வந்து ஆங்கிலத்தில் “சம்பந்தம், இனி இந்த ஊரில் நான் நாடகமே ஆடமாட்டேன்! ஒரு ரசிகனாவது கிடையாதா? எல்லாம் முண்டங்களாயிருக் கின்றனரே! இதற்காக என்னைப் பல்லாரியிலிருந்து ஏன் வரவழைத்தீர்கள்?” என்று கோபத்துடனும் வருத்தத்துடனும் கூறினார். பிறகு நான் அவரைச் சமாதனப்படுத்தி, “அவர்கள் சந்தோஷிக்காமற் போனாற் போகிறது; நாங்கள் எல்லாம் பார்த்து சந்தோஷிக்கிறோம், நீ வா” என்று சொல்லி அவரை மிகுதி பாகத்தையும் ஆக்டு செய்யும்படி செய்தேன். பிறகு, ஸ்ரீனிவாச ராகவாச்சாரி, துரைசாமி ஐயங்கார் முதலியோர்க்குத்தான், இவர்கள் தமிழர்கள் - தெலுங்கு சரியாக உச்சரிக்க முடியவில்லை என்று கூறினார்கள். ராகவாச்சார்லு தெலுங்கராயிற்றே, இவரிடம் என்ன குறை என்று விசாரித்ததன் பேரில் இன்னொரு விஷயம் வெளியாயிற்று. இவ்வூரில் இதற்கு முன்பாகவே ஒரு தெலுங்கு நாடக சபையிருந்ததாம். அதன் அங்கத்தினரில் சிலர், எங்கள் சபையின் தெலுங்கு நாடகங்களுக்கு அவ்வூரார் யாரும் போகக்கூடாது என்று கட்டுப்பாடு செய்ததாகக் கேள்விப்பட்டேன். “அரச மரத்தைப் பிடித்த சனி, அதன் கீழிருந்த பிள்ளையாரையும் பிடித்தது"