பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/515

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

500

நாடக மேடை நினைவுகள்


என்பதற்கிலக்காக, எங்கள் சபை தெலுங்குப் பிரிவைப் பிடித்த சனி, ராகவாச்சார்லுவையும் பிடித்தது.

நான்காவது நாடகம் ‘புத்திமதி’ என்பதை வைத்துக் கொண்டோம். இது சிறுத்தொண்டர் கதையைப் போன்றதாம்; இந்நாடகமானது சாயங்காலத்தில் ஆடப்பட்டது. “நல்ல நாளிலேயே நாழிப்பால், கன்று செத்தால்?"என்னும் பழமொழிக்கிணங்க, இரவு நாடகத்திற்கே ஜனக்கூட்டம் வரவில்லையென்றால், சாயங்கால நாடகத்திற்கு என்ன வரப்போகிறது?

இவ்விடம் நாங்கள் கடைசியாக ஆடிய நாடகம் “லீலாவதிசுலோசனா” எனும் எனது தமிழ் நாடகம். தெலுங்கு நாடகங்களின் கதியே இப்படியிருந்ததே, தமிழ் நாடகத்திற்கு யார் வரப் போகிறார்களென்று நான் வாஸ்தவமாய்ப் பயந்திருந்தேன். ஆயினும் இந்நாடகத்திற்கு ஏராளமான ஜனங்கள் வந்திருந்தனர். அன்றியும் ஆரம்பமுதல் கடைசி வரை நாடகம் நன்றாயிருக்கிறதெனப் புகழ்ந்தனர்! தெலுங்கு நாடகங்கள் எல்லாவற்றையும் விட, இந்தத் தெலுங்கு தேசத்தில் தமிழ் நாடகத்திற்கு வசூல் அதிகமாக வந்தது! நெல்லூரில் ஒரு தமிழ் நாடகமாடலாமா என்கிற கேள்வி, எங்கள் நிர்வாக சபை முன்பாக வந்தபொழுது, தெலுங்கு அங்கத்தினர் அதற்கு ஆட்சேபணை செய்தனர். அப்படி ஆட்சேபணை செய்தவர்களுக்குப் புத்திமதியாக எல்லாம் வல்ல இறைவன் இவ்வாறு செய்து வைத்தார்போலும்!

இங்கு, நெல்லூர் புரொக்ரெசிவ் யூனியன் என்னும் சபையார், எங்கள் சபைக்கு ஒரு விருந்தளித்தனர். மறுநாள் புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தோம். இந்த நெல்லூர்ப் பிரயாணத்தில், எங்கள் சபைக்குண்டான நஷ்டம் ரூபாய் 535-1-3. இதன் பிறகு எங்கள் சபையின் தெலுங்குப் பிரிவினர், எந்த ஊருக்கும் தாங்களாகப் போக வேண்டுமென்று பிரயத்தனப்படவில்லை. எங்கள் சபை நெல்லூர்ப் பிரயாணம் போய் வந்ததில், நான் அறிந்து கொண்ட இரண்டு புத்திமதிகள் என்னவென்றால்; ஒன்று, எந்த நாடகத்தையாவது ஆட வேண்டுமென்றால், கூடுமானவரையில் நாடக மெழுதப்பட்டுள்ள பாஷையையே தாய் பாஷையாக உடையவர்களைக் கொண்டே அதை நடத்த வேண்டுமென்பது;