பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/516

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப.சம்பந்த முதலியார்

501


இரண்டாவது, ஏதாவது ஒரு விஷயம் ஒருவரால் பிரேரேபிக்கப்பட்டால், அதற்கு நியாயமின்றி, பொறாமையினால் ஏதாவது நாம் ஆட்சேபணை செய்தால், அதன் பலனை நாம் அனுபவிக்க வேண்டுமென்பதாம்.

பிறகு இவ்வருஷம் கோடைக்கால விடுமுறையில் மறுபடியும் இலங்கைக்குப் போகவேண்டுமென்று தீர்மானித்தோம். இரண்டாம் முறை இலங்கைக்கு நாங்கள் போய்த்திரும்பும் பொழுது, அங்குள்ள எமது நண்பர்கள் மறுமுறை எப்பொழுது இங்கு வருவீர்கள் என்று கேட்டதற்கு இரண்டு வருஷம் கழித்து வருகிறோம் என்று சொல்லியிருந்தோம். அதன்படியே அங்கு போகத் தீர்மானித்து, வாரிக் மேஜர் என்பவருக்கு, முன் மாதிரியே அவர் ஏற்பாடுகளை யெல்லாம் ஒப்புக்கொள்ள முடியுமா என்று எழுத, அவர் “அப்படியே ஆகட்டும். மிகவும் சந்தோஷம்” என்று ஒப்புக்கொண்டு தந்தி கொடுத்தார். அதன்பேரில் மனத்தில் ஒரு கவலையுமில்லாமல் ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தோம். இம்முறை இலங்கைக்குப் போகும் வழியில் மதுரையில் தங்கி, அங்கு நான்கு நாடகங்கள் ஆட வேண்டுமென்று முதலில் தீர்மானித்தோம். ஏதோ சில காரணங்களால் யாழ்ப்பாணம் போக முடியாமற் போயிற்று. அதற்குப் பதிலாகத் திரும்பி வரும்பொழுது கும்பகோணத்தில் சில நாடகங்கள் ஆடினோம். இதுதான் எங்கள் சபை எடுத்துக் கொண்ட வெளியூர்ப் பிரயாணங்களில் மிகவும் நீடித்தது. சென்னையிலிருந்து புறப்பட்டுத் திரும்பி வர சுமார் 45 நாட்கள் பிடித்தன. இப்பிரயாணத்தில் மொத்தத்தில் 17 நாடகங்கள் ஆடினோம். தற்காலத்தில் வெளியூருக்குப் போய் இரண்டொரு நாடகங்கள் ஆடுவதென்றால் பிரமாதமென்று நினைக்கும் எனது இளைய நண்பர்கள் இதைக் கொஞ்சம் கவனிப்பார்களாக. உற்சாகமிருந்தால் எதையும் முடித்து வைக்கும் என்பது என் கருத்து.

மதுரையில் ஆடிய நான்கு நாடகங்களுக்கும் ஜனங்கள் ஏராளமாய் வந்திருந்தனர். நான்காவது நாடகத்தின் முடிவில், ஹானரபில் கே. ராம ஐயங்கார், மதுரைவாசிகள் சார்பாக அவ்விடம் நாடகங்களாடினதற்காகச் சபையைப் புகழ்ந்து வந்தனம் அளித்தனர். எனது நண்பர்கள் கே. வைகுண்டம் ஐயரும், பி. ராமமூர்த்தி பந்துலுவும் சபையோருக்கு விருந்து