பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/517

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

502

நாடக மேடை நினைவுகள்


அளித்தனர். எட்டையபுர ஜமீன்தார் அவர்கள் தன்னுடைய பெரிய வீடு ஒன்றை நாங்கள் தங்கியிருப்பதற்காகக் கொடுத்தார். இவ்விடத்தில் நாடகங்கள் ஆடினதில் எனக்கு இரண்டு மூன்று சமாச்சாரங்கள்தான் நன்றாய் ஞாபகமிருக்கின்றன. கடைசி நாடகமாகிய லீலாவதி - சுலோசனா நடத்திய தினம் மறுநாள், மதுரையை விட்டுப் போக வேண்டியிருக்குமே, ஆகவே, இன்று போய் மீனாட்சி சுந்தரேஸ்வராளைத் தரிசித்து விடைபெற்றுப் போக வேண்டுமென்று யோசனை பிறந்தது. இதன்பேரில் சாயங்காலம் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு, நாடகக் கொட்டகைக்கு ஆக்டர்களெல்லாம் புறப்பட, நான் மாத்திரம், ‘நீங்கள் போங்கள் நான் கோயிலுக்குப் போய் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு, கோயிலுக்குப் போனேன். கோயிலில் தரிசனம் செய்து கொண்டு திரும்புவதற்குள் கொஞ்சம் இருண்டுவிட்டது. அதன் பேரில், கொட்டகைக்குப் போக வழி தெரியாதவனாய், ஏறக்குறைய ஒரு மணி நேரம் தெருத் தெருவாய் சுற்றிக்கொண்டிருந்தேன்! எந்தெந்தத் தெருக்களில் அலைந்தேனோ மீனாட்சிக்குத்தான் தெரியும்! நாழியாய் விட்டதே, நம்மைக் காணோமென்று கொட்டகையில் தேடுவார்களே, காலம் பொறுத்துச் சென்றால் வேஷம் தரிக்க நாழிகையாகுமே, என்ன செய்வது என்று மிகக் கலங்கினேன். சென்னையில் நான் பிறந்து வளர்ந்து இத்தனை வருஷம் பழகிய போதிலும், இன்றைக்கும் சில தெருக்கள் தவிர மற்றத் தெருக்களில் கொண்டு போய்விட்டால், இராக்காலத்தில் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு, ஏதாவது தெரிந்த தெரு வருகிற வரையில் போய், பிறகு தான் வீட்டுக்குப் போக முடியும்! இதை நான் ஒரு பெருமையாகச் சொல்லவில்லை; இது பெரும் தப்பிதம்; இது நான் வெட்கப்படவேண்டிய விஷயமேயொழிய வேறன்று; சென்னையிலே இப்படியிருக்க, புது ஊராகிய மதுரையில் நான் வழி அறிவது அசாத்தியமாயிருந்தது. புது ஊரில், நாடகக் கொட்டகைக்கு வழியெப்படியென்று கேட்பதென்றால் மிகவும் வெட்கமாயிருந்தது. எங்கு சுற்றி வந்தாலும் கோயிலுக்குக் கொண்டு போய் விட்டது! இதென்னடா கஷ்டம் என்று நான் கலங்கிக் கொண்டிருக்கையில், தெய்வா தீனத்தால், யாரோ ஒரு பெரிய மனிதர் (அவர்