பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/519

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

504

நாடக மேடை நினைவுகள்


இரண்டு இடங்களில் நன்றாய் காயம்பட்டு, ரத்தம் பெருக ஆரம்பித்தது. நான் எனது சந்யாசிச் சட்டையின் கீழாகப் பனியனும், காலுக்கு சாக்ஸும் போட்டுக் கொண்டிருந்தபடியால், ரத்தம் பெருகியது அவ்வளவாக வெளியில் தெரியவில்லை. நான் விழுந்தபொழுது, அங்கு மேடையின் பேரில் வைத்திருந்த தோட்டச் சட்டம் ஒன்றில், என் தலை படாமல், ஒரு மயிரிழை தவறியது. உடம்பில் பட்ட காயம் தலையில் பட்டிருந்தால் பெரும் ஆபத்தாய் முடிந்திருக்குமென்று எண்ணுகிறேன். இந்த ஆபத்தினின்றும் மீனாட்சி சுந்தரேஸ்வராள் காப்பாற்றினார்கள் என்னை, என்று சந்தோஷப்பட்டேன். உடனே எனது நண்பர் ஓடிவந்து தான் செய்த தப்பிதத்தை அறிந்தவராய், என்னைக் கை கொடுத்துத் தூக்கும் பொழுது, ‘வாத்தியார் என்னை மன்னிக்க வேண்டும்’ என்று வேண்டினார் மெல்லிய குரலுடன். நானும் அதே குரலில் ஹாலில் வந்திருப்பவர்கள் அறியாதபடி, ‘அது போனாற் போகிறது. உன் பாடத்தைப் பார்’ என்று சொல்லிவிட்டு, மறு காட்சியில் நான் ராஜ குமாரன் உடையில் வரவேண்டியிருந்தபடியால், என் சந்யாசி உடையைக் கழற்றும் பொழுதுதான், எனக்குப் பட்ட காயங்களைப் பார்த்தேன். உடனே அந்தக் காயங்களைக் கட்டிக்கொண்டு, பிறகு மற்றக் காட்சிகளை நடத்தினேன்.

இவ்விடத்தில் நடந்தவற்றுள் மூன்றாவதாக ஞாபகமிருக்கும் விஷயம், எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவின் நர்த்தனமானது, மதுரை நாடகப் பிரியர்களுக்கு விளைத்த உற்சாகமே. மூன்றாவது நாடகமாகிய “காலவ ரிஷி”யில் ஊர்வசியாக அவர் நர்த்தனம் செய்த பொழுது அதைப் பார்த்தவர்கள் பெருமகிழ்ச்சி யடைந்தார்கள் என்று சொல்வது அதிகமாகாது. நர்த்தனம் முடிந்தவுடன், “இன்னும் கொஞ்சம் நர்த்தனம் செய்யவேண்டும்” என்று கரகோஷம் செய்து தெரிவித்தனர். அதன்பேரில், தனக்கு மிகவும் இளைப்பாயிருப்பதாகவும் தன்னால் இனி முடியாதென்றும் எனது நண்பர் எனக்குத் தெரிவிக்க, நான் அவரை மன்னிக்கும்படி வெளியில் உள்ளவர்களுக்குச் சொல்லி அனுப்பினேன். அதன்பேரில் வருகிற கடைசி நாடகத்திலாவது மறுபடியும் ரங்கவடிவேலு நாட்டியத்தைப் பார்க்க வேண்டுமென்று சொல்லியனுப்பினார்கள். அன்றியும்