பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/521

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

506

நாடக மேடை நினைவுகள்


மென்பது அனைவரும் அறிந்த விஷயமே. இவ்வங்கப் பூர்த்தியில்லாத சிலர் ஆடிவரும்போது பின்புறம் திரும்புங்கால் சப்பையாகத் தோன்றுவதை நான் பார்த்திருக்கிறேன். இதற்காகச் சிலர் நர்த்தனம் செய்யும்பொழுது சிறு குல்டு துணிகளை வைத்துக் கட்டிக்கொண்டு ஆடுவதை நான் பார்த்திருக்கிறேன்! மேற்கூறிய குறைகளெல்லாமின்றி, நர்த்தனஞ்செய்வதற்குத் தக்க உருவம் எனதுயிர் நண்பரிடம் சுபாவமாகப் பொருந்தி யிருந்தமையாற்றான், அவரது நர்த்தனம் சென்னை ராஜதானியில் நாங்கள் போயிருந்த இடங்களிலெல்லாம் சிலாகிக்கப்பட்டதென்று நான் நம்புகிறேன். அன்றியும் இவ்வரிய கலையில் பெயர் பெற வேண்டுமென்று விரும்புவோர் கவனிக்கவேண்டியது இன்னொன்றுண்டு. அதாவது நர்த்தனம் செய்யுங்கால் பாதவின்யாசங்கள் மிகவும் மிருதுவாயும் அழகாயுமிருக்க வேண்டும். பாரசீக நாடகத்தில் பேய்கள் கூத்து ஆடுவது போல் அரங்கத்தில் “தும்தும்"என்று துமுக்கலாகாது. இக்குறைகளை யெல்லாம் நான் எடுத்துக் கூறியதன் முக்கியக் காரணம், நாளுக்கு நாள் க்ஷிணித்து வரும் இக்கலையைக் கற்க விரும்பும் எனது இளைய நண்பர்கள், மேற்சொன்ன குற்றங்களையெல்லாம் களைந்து, இவ்வரிய சாஸ்திரத்தை ஆதரிப்பார்கள் என்பதேயாம்.

மதுரையில் எங்கள் நாடகங்களை முடித்துக்கொண்டு புறப்படும்பொழுது, மறுபடியும் இவ்வூருக்கு வந்து நாம் நாடகமாடக் கொடுத்து வைத்திருக்கிறோமோ என்னவோ என்னும் கவலையுடன் நான் புறப்பட்டேன். அக் கவலையை நீக்கி, மறுபடியும் இந்த மதுரை மாநகரிலேயே எங்கள் சபையாருடன் நாடகங்கள் ஆடும்படியும், அன்றியும், இந்நகரத்தில் ஸ்தாபிக்கப்பட்ட மதுரை டிராமாடிக் கிளப்புக்காக, பன்முறை இவ்விடம் வந்து நாடகமாடும்படியான பாக்கியம், எனக்களித்த, நான் வழிபடுதெய்வங்களாகிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்களுக்கு, நான் அவர்கள் பாதங்களைத் தினம் மறவாது துதித்தலன்றி, வேறென்ன கைம்மாறு செய்யக்கூடும்?

நாங்கள் மதுரையை விட்டுப் புறப்படக் குறித்த தினத்திற்கு முந்தியநாள் இலங்காத் தீவில், நாங்கள் போகவேண்டிய ரெயில் பாதையானது பெரும் மழையினால் உடைந்து