பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/522

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப.சம்பந்த முதலியார்

507


சேதப்பட்டதாகவும், ரெயில் அம் மார்க்கத்தில் வழக்கம் போல் போக இன்னும் சில தினம் பிடிக்குமென்றும் பத்திரிகைகள் மூலமாகக் கண்டோம்! இந்த தெய்வாதீனத்தால் நேரிட்ட கஷ்டத்திற்கு என்ன செய்வதென்று யோசித்து, எப்படியும் எடுத்துக்கொண்ட பிரயாணத்தைக் கைவிடலாகாதென்று தீர்மானித்து, மண்டபத்தில் அப்பாதை செப்பனிடப்படுகிற வரையில் தங்கிப் பிறகு இலங்கைக்குப் போகவேண்டுமென்று தீர்மானித்தோம். இவ்வாறு சமுத்திர மணல் தவிர வேறெதுவும் கிடைக்காத இச்சிற்றூரில் நான்கு நாள் தங்க வேண்டியிருந்தது. நான்காவது தினம் ரெயில் பாதை செப்பனிடப்பட்டு ரெயில் வழக்கம்போல் போகிறதெனச் சேதி வரவே, உடனே புறப்பட்டு தனுஷ்கோடிவரையில் புதிதாய் ஏற்படுத்தப்பட்ட ரெயில் மார்க்கமாகப் போய் அங்கிருந்து சிறிய ஸ்டீமர் ஏறி, இரண்டு அல்லது இரண்டரை மணி சாவகாசத்திற்குள்ளாகத் தலைமன்னார் என்னும் இலங்கைத் தீவிலுள்ள ரெயில்வே ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தோம்.

கொழும்பு ஸ்டேஷன் போய்ச் சேர்ந்ததும், முகத்தில் நகையுடன் எங்களை வரவேற்ற எங்கள் பழைய நண்பர்களின் நல்வார்த்தைகளால், வழியில் நாங்கள் பட்ட கஷ்டங்களையெல்லாம் க்ஷணத்தில் மறந்தோம்.

இம்முறை, எங்களுடன் முதலிரண்டு முறை வருவதற்குத் தடைப்பட்ட எனது நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயர் வந்தார். இம்முறை இங்கு எட்டு நாடகங்கள் நடத்தினோம். அவற்றுள் ஒன்று, யாழ்ப்பாணத்து ஸ்திரீகள் சங்கத்தின் சார்பாகக் கொடுத்து அதன் வரும்படியை அச்சங்கத்தாருக்குக் கொடுத்தோம். இம்முறை தினம் யாராவது ஒருவர் வீட்டில் விருந்து நடந்ததென்றே சொல்ல வேண்டும். டாக்டர் ஜான்ராக்வுட் என்பவரும், கொழும்பில் பெரிய அட்வகேட்டாயிருந்த ஜெயவர்த்தன் என்பவரும், திருநாவுக்கரசு அம்மாளும், மூத்த தம்பி என்பவரும் எங்கள் சபைக்குப் பெரும் விருந்தளித்தனர். அன்றியும் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவும் நானும் தினம் காலை மாலைகளில் எங்காவது சிற்றுண்டிக்கோ அல்லது போசனத்திற்கோ அழைக்கப்பட்டோம். ஆயினும், ஒரு முறை பட்டது போதுமென்று இம்முறை மிகவும் ஜாக்கிரதையாக இருந்து, நோயில் விழாதபடி என் உடம்பைக் காப்பாற்றிக் கொண்டேன்.