பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/524

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப.சம்பந்த முதலியார்

509


தீவிற்குப் போவேனோ என்னவோ சந்தேகம். இம்முறை போய் பதினைந்து வருடங்களாய் விட்டன; எனக்கும் வயதாகிவிட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில், நான் இங்கெழுதுவதன் மூலமாக, எங்கள் சபைக்கும் முக்கியமாக எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுக்கும் எனக்கும், எமது இலங்கை நேசர்கள் செய்த பேருதவிக்கும், அவர்கள் பாராட்டிய பேரன்பிற்கும், கைம்மாறாக என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன். இங்கெழுதப்பட்டது எமது இலங்கை நேசர்களின் நேத்திரத்திற்படுமாயின், இதையே எனது கைம்மாறாகக் கொள்வார்களாக! நான் நடமாடும் சிற்றுலகில், சுய நன்மையைப் பாராட்டும் மனிதர்களின் செய்கைகள் என் மனத்தில் புண்படுத்தும் போதெல்லாம், எனது இலங்கை நண்பர்களை நினைத்து, சுய நன்மையைப் பாராட்டாத ஜனங்கள் சிலரேனும் இவ்வுலகில் இருக்கின்றனர் என்றெண்ணிச் சந்தோஷித்து, என் மனத்தைத் தேற்றிக் கொள்ளுவது தற்காலம் எனக்கு வழக்கமாய் விட்டது.

இனி, கும்பகோணத்தில் இரண்டாம் முறை நாங்கள் நாடகமாடிய கதையை எழுதுகிறேன். இம்முறை நாங்கள் நாடகமாடியது பழைய இடத்திலன்று; புதிதாகக் கட்டப்பட்ட வேறொரு நாடக சாலையில். இது பழைய நாடக சாலையைப் போல் இவ்வூரின் மத்தியில் இல்லாது ஒரு புறமாகக் கட்டப்பட்டது. இக்காரணத்தினாலோ வேறெக் காரணத்தினாலோ முதன்முறை இங்கு நாடகமாடியபோது வந்த ஜனக்கூட்டம் இம்முறை வரவில்லை. போதாக்குறைக்கு முன்பு எங்கள் சௌகர்யங்களை எல்லாம் மிகவும் சிரத்தையுடன் கவனித்த பாலசுப்பிரமணிய ஐயர் அவர்கள் இவ்வூரில் இல்லை இப்பொழுது. ஆயினும் இங்கு நாடகமாடியதால் எங்கள் சபைக்கு நஷ்டம் நேரிடவில்லை. வரவுக்கும் செலவிற்கும் சரியாய்ப் போய்விட்டது. இவ்விடம், எங்கள் சபையைப்போல ஸ்தாபிக்கப்பட்ட வாணி விலாச சபையாரும், லட்சுமிவராஹ ஐயங்கார் அவர்களும், அநந்தாச்சாரியார் அவர்களும், எங்களுக்கு நல்ல விருந்தளித்தனர். ஐந்து நாடகங்களை இங்கு முடித்துக்கொண்டு சென்னைக்குப் போய்ச் சேர்ந்தோம். இதுதான் எங்கள் சபை வெளியூர்களில் நெடுநாள் கழித்த பிரயாணம். சென்னையை விட்டு ஏறக்குறைய 45 நாட்கள்