பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/526

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப.சம்பந்த முதலியார்

511


தைந்து வருடங்களும் (ஒரு வருஷம் தவிர) சபையின் தமிழ் நாடகங்களைச் சூத்திரதாரனாகப் பார்த்து வந்த நான், இவ்வருஷம் அவ்வேலையினின்றும் விலகிக் கொண்டேன். சபையின் ஆரம்பத்தில் வி. திருமலைப் பிள்ளை அவர்கள் கண்டக்டராகவிருந்தபோதிலும், அவர் வேலையெல்லாம் நான் பார்த்து வந்தேன் என்பது எங்கள் சபையோர் அனைவரும் அறிந்த விஷயமே. இந்த இருபத்தைந்து வருஷங்களில் கடைசி சில வருஷங்களில், வருஷாந்திரம் எங்கள் சபையில் கண்டக்டர் வேலைக்கொருவரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில், எனக்குப் போட்டியாகச் சிலர் நின்றனர். அச்சமயங்களிலெல்லாம் சபையின் பொதுஜனக் கூட்டமானது என்னையே தேர்ந்தெடுத்தது. அச்சமயங்களிளெல்லாம் எனது நண்பர்களிற் பலர், “சம்பந்தம், நீ ஏன் இவ்வாறு வருஷா வருஷம் கஷ்டப்படுகிறாய்? உனக்கோ வயதாகி வருகிறது. இச்சுமையை இளையவர்கள் தோள் மேல் சுமத்திவிட்டு ஆயுமென்றிருக்கிறதுதானே?” என்று என் நலத்தைக் கோரிக் கூறியிருக்கின்றனர். அப்போது அவர்களுக்கெல்லாம் “நான் இன்னும் சபைக்குக் கண்டக்டராகச் சில வருஷங்கள் உழைக்க வேண்டுமென்று எண்ணியிருக்கிறேன். இத்தனை வருஷம் உழைப்பது என்று ஒரு நிச்சயம் வைத்திருக்கிறேன். அதுவரையில் கண்டக்டர் வேலைக்கு வருஷா வருஷம் நின்றுதான் தீருவேன். அதற்குள்ளாக, சபையின் பொது ஜனக் கூட்டத்தார், தாங்களாக என்னை விலக்கி விட்டால் நலமாயிற்று” என்று பதில் கூறியுள்ளேன். என்னை நீக்கி மற்றவர்களைக் கண்டக்டராக நியமிக்க வேண்டுமென்று பிரயத்தனப்பட்டு, முனிசிபல் எலக்ஷனிலும் சட்டசபை எலக்ஷனிலும் வோட் சம்பாதிப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் என்று பெயர் பெற்ற எனது நண்பர்களிற் சிலர், அங்கத்தினருடைய வீடு வீடாய்ப் போய்ப் பிரயத்தனப்பட்டனர், அச்சமயங்களிலெல்லாம் நான் கண்டக்டர் வேலைக்கு நிற்கப் போகிறேன் என்பதை அறிவித்ததன்றி, ஒருவரையும் தங்கள் வோட் எனக்குக் கொடுக்கும்படி நான் கேட்டவனன்று. இதற்குச் சில முக்கியக் காரணங்களுண்டு. முதலாவது, இம்மாதிரியான தேர்ந்தெடுத்தல்களிலெல்லாம் அவர்களாகப் பார்த்து என்னை நியமிக்க வேண்டுமே யொழிய, நாம் போய்