பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/528

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப.சம்பந்த முதலியார்

513


பெற்றுக் கொண்டேன். என்னுடன் இதுகாறும் உழைத்த ஆக்டர்களும் நான் கூறியதை அங்கீகரித்து, சபையின் முதல் அங்கத்தினராகிய ஜெயராம் நாயகர் மூலமாக, எனக்கு மரியாதை செய்தனர். ஆயினும் அச்சமயம் எனது நண்பர்களுக்கு நான் வாக்களித்தபடி நான் இந்த வேலையினின்றும் விலகியபோதிலும், இன்றுவரை, சபையின் ஆக்டர்களுக்காவது, கண்டக்டர்களுக்காவது, என்னாற் செய்யக்கூடிய உதவி ஏதாவது இருந்தால் அதைச் செய்து வருகிறேன்.

மேற்சொன்னபடி நான் விலகிவிட்ட பிறகு துரைசாமி ஐயங்கார், கண்டக்டராகச் சபையோரால் நியமிக்கப்பட்டார், இவ்வருஷம்.

இவ் வருஷம் நான் புதிதாய் எழுதிய நாடகம் ‘விஜய ரங்கம்’ என்பதாம். இதைப்பற்றி நான் சற்று விவரமாய் எழுத வேண்டியது அவசியம். இருபத்தைந்தாம் ஆண்டு பூர்த்திக் கொண்டாட்டத்தின் சம்பந்தமாக எங்கள் சபையார், தமிழிலும் தெலுங்கிலும் புதிதாய் எழுதப்படுகிற சிறந்த ஜனசமூக நாடகங்களுக்குத் தங்கப் பதக்கங்கள் அளிப்பதாக விளம்பரம் செய்தனர். இப் பரீட்சைக்கு நாடகங்கள் அனுப்புவோர் தங்கள் சொந்தப் பெயரை வெளியிடக் கூடாதென்றும், மாறு பெயர் வைத்தனுப்ப வேண்டுமென்றும் நிர்ணயஞ் செய்திருந்தனர். நாடகக் கர்த்தா தன் சுயமான பெயரை வெளியிட்டால், பரிசோதகர்கள், அவன் மீதுள்ள பட்சபாதத்தினால் அவனுக்கு ஒருவேளை பரிசளிக்கக்கூடுமென்று, இந்தக் கட்டுப்பாடு செய்தனர். யாரைக் குறித்து இந்த நிபந்தனை முக்கியமாக ஏற்படுத்தப் பட்டதென்று இதை வாசிக்கும் என் நண்பர்கள் எளிதில் ஊகித்துக் கொள்ளலாம். இப் பரீட்சையில் “டெஸ்டி காடோ”என்கிற பெயரை வைத்து இந்த “விஜயரங்கம்"என்னும் நாடகத்தை எழுதியனுப்பினேன். டெஸ்டிகாடோ, என்கிற பதத்திற்கு, “பிதுரார்ஜிதத்தி லிருந்து விலக்கப் பட்டடவன்” என்று ஒருவாறு பொருள் கூறலாம். இம் மாறுபெயர் சர் வால்டர் ஸ்காட் என்னும் பிரபல இங்கிலீஷ் ஆசிரியர் எழுதிய ‘ஐவான் ஹோ’ என்னும் கதையில், கதாநாயகனான ‘ஐவான் ஹோ’ பூண்ட மாறுபெயராம். சிறு வயதில், இக்கதையைப் பன்முறை படித்து நான் மிகவும் மகிழ்ந்திருக்கிறேன். ஆகவே, இப்பெயரையே என்