பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/530

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப.சம்பந்த முதலியார்

515


வில்லை என்று நினைக்கிறேன். ஆகவே இந்த “விஜயரங்கம்” என்னும் நாடகத்தில் கடைசிக் காட்சியின் முன் காட்சியைச் சற்று மாற்றி எழுதினால் நன்றாயிருக்கும் என்று எனக்குப் புத்தியில் நன்றாய்ப் பட்டபோதிலும், அங்ஙனம் செய்யாதிருக்கிறேன்.

இந்தப் பரீட்சைக்கு 15 தமிழ் நாடகங்கள் அனுப்பப்பட்டன. இவைகளுள் எது சிறந்ததெனத் தேர்ந்தெடுக்க, ம-ள-ள-ஸ்ரீ செல்வகேசவராய முதலியார் அவர்கள், எம்.ஏ., திவான்பஹதூர் பவாநந்தம் பிள்ளை அவர்கள், பி.ஆர். கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் மூவரும் கமிட்டியாக ஏற்படுத்தப்பட்டனர். இவர்கள் இப்பதினைந்து நாடகங் களையும் பரிசோதித்துப் பார்த்து, “விஜயரங்கம்” என்னும் எனது நாடகத்திற்குத்தான் பொற்பதக்கமளிக்க வேண்டுமென்று தீர்மானித்தார்கள். அவர்களுடைய தீர்மானம் கைக் கெட்டியபிறகே, எங்கள் நிர்வாக சபையார், ஒவ்வொரு மாறு பெயரும் இன்னாருடையது என்று சீல் வைத்து அனுப்பப் பட்டவைகளைப் பிரித்துப் பார்த்து, ‘விஜயரங்கம்’ என்னும் நாடகம் என்னால் அனுப்பப்பட்டது என்று கண்டனர்.

இந்த விஜயரங்கம் என்னும் நாடகத்தைப்பற்றி எனது நண்பர்களுக்குச் சில விஷயங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

இது நான் எழுதியுள்ள நாடகங்களுக்குள் ஒரு சிறந்த நாடகம் என்பது என் கருத்து. இதைத் தற்புகழ்ச்சியாக எனது நண்பர்கள் எண்ணலாகாது. ஒரு கிரந்த கர்த்தா எழுதியுள்ள புஸ்தகங்களில் அவன் மனத்திற்கே பிடித்ததாகச் சில எப்படியும் இருந்துதான் தீர வேண்டும். நான் எழுதியுள்ள நாடகங்களில் என் மனத்திற்கே அதிகத் திருப்தியைச் சில கொடுத்திருக்கின்றன. அவற்றுள் “விஜயரங்கம்” ஒன்றாகும். நான் எழுதியுள்ள நாடகங்களுள் பலவற்றை நான் இரண்டாம் முறைகூடப் படிப்பதில்லை. இந்த விஜயரங்கத்தைப் பன்முறை நான் படித்தும், இப்பொழுது எனக்கு அவகாசமிருக்கும்பொழுதெல்லாம் மற்றொரு முறை படிக்க என் மனம் நாடுகின்றது.

இந்த நாடகத்தின் கதையை நான் மனத்தில் கோர்த்த பொழுது, இந்நாடகத்தின் கதாநாயகனுக்கும், இந்நாடகத்திற்கும், என் தகப்பனாருடைய பெயரை வைக்கவேண்டு