பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/531

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

516

நாடக மேடை நினைவுகள்


மென்று தீர்மானித்து அப்பெயரை வைத்தேன். இப்படி வைத்ததற்குக் காரணம், என் தகப்பனார் மீது எனக்கு இந்நாளளவும் இருக்கும் பேரன்பே; இது நான் சாமளவும் குறையாதிருக்க வேண்டுமென்பது என் பிரார்த்தனை. என் தகப்பனாருடைய ஜீவிய சரித்திரத்திற்கும் இக்கதைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. சிலர் இந்நாடகத்தில் என் அனுபவத்தைப் பெரும்பாலும் எழுதியிருப்பதாக எண்ணுகிறார்கள்; என்னிடம் நேராகவும் சொல்லியிருக்கிறார்கள்; அது தவறாகும். ஏதோ ஒன்றிரண்டு சிறு சந்தர்ப்பங்களை என் அனுபவத்தினின்றும் இதில் எழுதியிருக்கலாம். அவற்றுள் ஒன்று எனக்கு முக்கியமாக ஞாபகமிருக்கிறது. என்னுடைய பிள்ளை வரதன் ஏழெட்டு வயதுக் குழந்தையாயிருக்கும்பொழுது, ஏதோ துஷ்டத்தனம் செய்தான் என்று அவன் கன்னத்தில் ஒரு முறை நான் ‘பளீர்’ என்று அடிக்க, அவன் அப்படியே துடித்துப் போனான். கன்னத்தில் அடித்தால் இவ்வளவு நோயுண்டாகிறதா என்று சந்தேகித்தவனாய், நான் என் வீட்டின் மேல் மாடிக்குச் சென்று, ஒருவருமில்லாத சமயம் பார்த்து என் கன்னத்தில் நானே ‘பளீர்’ என்று அடித்துக்கொண்டு பார்த்தேன். உடனே எனக்குண்டான நோயினால், கன்னத்தில் அடிப்பதனால் இவ்வளவு கஷ்டமுண்டாகிறதென அறிந்தேன்! நான் கன்னத்தில் அடிபட்டதில்லை. சுயமாக இதை அனுபவித்த பிறகு, சிறு பிள்ளைகளைக் கன்னத்தில் அடிக்கக்கூடா தென்பதை அறிந்தேன்! இந்த அனுபவத்தை, கதாநாய கனான விஜயரங்கம் சுயமாக அறிந்ததாக எழுதியுள்ளேன். இம்மாதிரியான இரண்டொரு சந்தர்ப்பங்கள் என்னையுமறியாதபடி இக்கதையில் வந்திருக்கலாம். என்னுடைய சொந்த அனுபவங்களையெல்லாம் இக்கதையில் எழுதியிருக்கிறேன் என்று எண்ணுவது முற்றிலும் தவறாகும். அப்படி வாஸ்தவமாயிருந்தால், நான் அப்படிச் செய்திருக்கிறேன் என்று இங்கு எழுதத் தடையில்லை. விஜயரங்கத்தினிடத்தில், வெட்கப்படத்தக்க குணம் ஒன்றும் கிடையாது. ஆயினும் எனது நண்பர்களுட்சிலர், இவ்வாறு ஏன் எண்ணவேண்டும் என்று யோசித்துப் பார்த்தேன். எனக்குத் தெரிந்த வரையில், கதாநாயகனான விஜயரங்கத்தை ஒரு நாடக ஆசிரியனாக நான் வர்ணித்ததும், இந்நாடகத்தில் சில