பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/532

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

517


காட்சிகள் நாடக மேடையிலே நடக்கிறதாக நான் எழுதியுள்ளதும், மற்றவர்களை இவ்வாறு எண்ணும்படி செய்திருக்கலாம் எனத் தோன்றுகிறதெனக்கு. அன்றியும் உலகத்தைப் பற்றிய என்னுடைய சில அபிப்பிராயங்களை, கதாநாயகன் அபிப்பிராயங்களாக நான் எழுதியிருப்பது அவ்வாறு எனது நண்பர்களுட் சிலர் சந்தேகிக்கும்படி இடங்கொடுத்திருக்கலாம். மேற்கூறிய சில ஒற்றுமைகள் நீங்க, இந்நாடகத்தை முழுவதும், என்ன மனத்தால் நிர்மாணிக்கப்பட்டது என்பதை எனது நண்பர்கள் நம்பும்படிக் கேட்பேன்.

இந் நாடகத்தில் சில காட்சிகள் - முக்கியமாக, விஜயரங்கம் திருமெஞ்ஞான முதலியார் வீட்டில் வேலையாளாக இருந்து நீங்கும் காட்சியும், விஜயரங்கம் ராஜேஸ்வரியுடன் சம்பாஷிக்கும் காட்சியும், விஜயரங்கம் தன் மனைவியிடம் மன்னிப்புக் கேட்கும் காட்சியும் - நான் எழுதியவற்றுள் மிகச் சிறந்தன என்பது என் அபிப்பிராயம். இந்நாடகத்தை வாசித்த எனது நண்பர்கள் பலருடைய அபிப்பிராயமும் அதுவே. இந்நாடகத்தைப் பற்றி நான் பெற்ற நன்மதிப்புக் கடிதங்களைப்போல் மற்றெந்த நாடகத்திற்கும் பெற்றேனில்லை.

இந்நாடகமானது மறு வருஷம் எங்கள் சபையோரால் ஆடப்பட்டது. அப்போது எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு, மங்கையர்க்கரசியாக நடித்தார். நான் விஜயரங்கம் பிள்ளையாக நடித்தேன். சத்யமூர்த்தி ஐயர் ரங்கநாதம் ஆகவும், சுந்தரவரத ஐயங்கார் ராஜேஸ்வரியாகவும் நடித்தார்கள். புதிய நாடகமாயிருந்தபடியாலும் பொற்பதக்க மளிக்கப்பட்ட நாடகமானதனாலும், எங்கள் சபையின் அங்கத்தினர் ஏறக்குறைய எல்லோரும் வந்திருந்தனர். அன்றியும் வெளியார் வந்ததனால் பண வசூலும் அதிகமாயிருந்தது.

இரண்டும் ஒன்றாய்ச் சேர்ந்தபடியால் வந்தவர்களுக்கெல்லாம் விக்டோரியா பப்ளிக் ஹாலில் இடம் இல்லாமற் போக, நாடக மேடையின் மீது பிடிக்கக்கூடிய வரையில் எங்கள் சபையின் அங்கத்தினருக்கு இடங்கொடுக்கும்படி நேர்ந்தது. நாடகமானது நன்றாய் நடிக்கப்பட்டது என்பது வந்தவர்களுடைய அபிப்பிராயம்; என்னுடைய அபிப்பிராயமும் அப்படியே.