பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/533

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

518

நாடக மேடை நினைவுகள்




இந்நாடகத்தில் நன்றாய் நடித்தவர்களுள் முதல் பரிசு கொடுப்பதென்றால், விஜயரங்கம் பிள்ளையின் குமாரனாகிய சாமிநாதனாக நடித்த வி.வி. ராமதுரைக்குத்தான் அதைக் கொடுப்பேன். ராமதுரை எனது பால்ய நண்பராசிய வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காருடைய பிள்ளை; சாமிநாதன் வேஷத்திற்குச் சிறு பிள்ளையாகவும் இருக்கவேண்டும், நன்றாய் நடிக்கும் திறமை வாய்ந்தவனாயுமிருக்க வேண்டுமே என்று நான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் போது, ஒரு நாள் எனது நண்பர் குமாரனாகிய ராமதுரையைச் சந்தித்தேன். உடனே இப்பிள்ளை சாமிநாதன் வேடத்திற்குத் தக்கவனாயிருப்பான் என்று என் மனத்தில் உதிக்க, ராமதுரையை இந்த வேஷம் “நீ எடுத்துக்கொள்கிறாயா?” என்று கேட்க, ராமதுரையும் ஒப்புக்கொள்ள, அதன்மீது வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் அனுமதியைப் பெற்று, ராமதுரைக்கு ஒத்திகை நடத்தி வந்தேன். நான் சொன்ன சூட்சுமமான விஷயங்களையெல்லாம் மிகவும் எளிதில் கிரஹித்து, நாடக தினம் எல்லோரும் (அவரது தகப்பனார் உட்பட) மெச்சும்படியாக மிகவும் நன்றாய் நடித்தான். அக்காலம் சிறுவனாய் நடித்த ராமதுரை, இப்பொழுது பெரியவனாகி, வக்கீலாகி, தகப்பனாருமாகிவிட்டான். காலம் எவ்வளவு விரைந்து செல்கிறது! இந்நாடகத்தைப் பிறகு எங்கள் சபையில் நடத்தியபோதெல்லாம் எனது நண்பர் கே. நாகரத்தினம் ஐயருடைய குழந்தை ‘மணி’ நன்றாய் நடித்தான். ஏறக்குறைய ராமதுரையைப் போலவே நடித்தான் என்று நான் சொல்ல வேண்டும். இந்த “சாமிநாதன்” பாகம் இந்நாடகத்தில் ஒரு முக்கியமானது. இதைச் சரியாக நடிக்காவிட்டால் நாடகமே நன்றாயிராது என்பது என் துணிபு. ஆகவே, இதை நடிப்பதற்கு ராமதுரை, மணி ஆகிய இரண்டு பால ஆக்டர்கள் கிடைத்தது நான் செய்த அதிர்ஷ்டமே.

ராமதுரைக்குப் பிறகு நன்றாய் நடித்த ஆக்டர், ஒரு சிறு நாய்க்குட்டியே! இந்நாடகத்தை வாசித்தவர்கள் இதில் ஒரு சிறு நாய்க்குட்டி வருகிறது என்பதை நன்றாய் அறிவார்கள். இதற்காக, எனது நண்பர் துரைசாமி ஐயங்காரிடமிருந்து ஒரு சிறிய நாய்க் குட்டியை வரவழைத்து, அதை எங்கள சபையில் இரண்டு வாரம் வைத்திருந்து ராமதுரையின்