பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/537

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

522

நாடக மேடை நினைவுகள்




பலர் வேண்டினர். ‘காலவ ரிஷி’ நாடகத்தில் தவிர, மற்ற நாடகங்களின் இடையில் அவர் நடிக்க வேண்டிய சந்தர்ப்பம் வேறொன்றுமில்லாதிருந்தது. இதை நிவர்த்திக்கும் பொருட்டு, அவர் நாடகத்தின் ஒரு பாகமாகவே நடிக்க வேண்டிய ஒரு கதையை நாடகமாக எழுத வேண்டுமெனத் தீர்மானித்து, இந்த ஊர்வசியின் சாபம் எனும் நாடகத்தை எழுதலானேன். இதில் ஒரு முக்கியக் காட்சி, இந்திரன் சபையில் ஊர்வசியானவள், இந்திரன் மகனான அர்ஜுனன் மனத்தைக் கவர, தன் முழுத் திறமையும் கொண்டு நடிக் கிறாள். இது எனதுயிர் நண்பர் தனது நர்த்தனக் கலையை, நன்கெடுத்துக் காட்ட மிகவும் சௌகரியமாயிருந்தது. இந்த ஒரு காட்சியை மாத்திரம் சில காலத்திற்கு முன் எழுதியிருந்தேன். அதனுடன், அர்ஜுனன் தவம் புரியும் காட்சியையும், பிறகு ஊர்வசியை வெறுக்கும் காட்சி முதலானது சேர்த்து ஒரு நாடகமாக எழுதி முடித்தேன். அதை முடித்தபோது ஒரு நாள் ஆடக்கூடிய நாடகத்திற்கு மிகவும் சிறிதாயிருந்தபடியாலும், இதில் ஹாஸ்ய ரசம் இல்லாதிருந்த படியாலும், அதற்காகத் துரியோதனன் அர்ஜுனன் தவத்தைக் கெடுக்க விரும்பி, தன் சாரணர்களை அனுப்பியதாக, மூன்று இடைக் காட்சிகளைச் சேர்த்து நாடகத்தைப் பூர்த்தி செய்தேன்.

எனதுயிர் நண்பர் ஊர்வசியாக நடித்தபடியால், இந்நாடகத்தில் நான் அர்ஜுனன் வேடம் பூண்டேன். இந் நாடகம் எங்கள் சபையோரால் இவ் வருஷம் ஜூலை மாதம் 29ஆம் தேதி நடிக்கப்பட்டது. மிகவும் நன்றாயிருக்கிற தென எங்கள் சபை அங்கத்தினரே மெச்சி, இரண்டு மூன்று வாரத்திற்குள் மறுபடியும் ஆடவேண்டுமென்று நிர்ப்பந்தித்தனர். இதற்கு முக்கியக் காரணம், ரங்கவடிவேலு தன் நர்த்தனத்தில் புதிதாய்க் கற்றுக் கொண்ட சில அபிநயங்களும் அர்ஜுனனுக்கு, பரமசிவன்- பார்வதி சமேதராய்க் காட்சி கொடுக்கும் காட்சியுமே என்று நம்புகிறேன். அர்ஜுனனை மல்யுத்தத்தில் தோற்கடித்த பிறகு, பார்வதியின் வேண்டுகோளுக்கிரங்கி, பரமசிவன் காட்சி கொடுத்த பொழுது; பிரமா, விஷ்ணு , சுப்பிரமணியர், விநாயகர், தேவேந்திரன் முதலியோரும் தங்கள் வாஹனங்களின் மீதூர்ந்து, ஆகாயத்தில் அவனுக்குக் காட்சி கொடுத்துத் தங்கள் தங்கள் ஆயுதங்களையும் அவனுக்கு அளித்ததாகப்