பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

39


எழுதிக் கொண்டு ஒத்திகை ஆரம்பிக்கு முன், நாங்கள் என்ன பாட்டுகள் பாடுவதென்று கேட்க ஆரம்பித்தார்கள். அக்காலத்தில் பாட்டில்லாமல் நாடகம் என்றால் நூலில்லாமல் வஸ்திரமா என்னும் ஸ்திதி. ஏறக்குறைய அதற்கப்புறம் நாற்பது வருடங்களாகியும் தற்காலத்தில் பெரும்பாலும் பாட்டில்லாமல் நாடகமே கிடையாதல்லவா? ஆதிகாலத்தில் தென்னாட்டில் நாடக மென்றால் முற்றிலும் பாட்டாகவே இருந்திருக்கவேண்டு மென்பதற்கு ஐயமேயில்லை. பிறகு வசனமானது கொஞ்சம் கொஞ்சமாக இடையிடையே சேர்க்கப்பட்டது. இப்பொழுதுதான் கேவலம் வசன ரூபமான நாடகங்கள் கார்த்திகைப் பிறைபோலக் காணப்படுகின்றன.

தாங்கள் பாடப் பாட்டுகள் வேண்டுமென்று நாடகப் பாத்திரங்கள் கேட்டபொழுது எனக்குப் பெருங் கவலையுண்டாயிற்று. எனக்கும் பாட்டிற்கும் அக்காலம் கன்யா குமரிக்கும் இமய மலைக்குமுள்ள தூரம்தான் இருந்தது. (இப்பொழுதும் அந்த தூரம் அதிகமாகக் குறுகவில்லை யென்றே எண்ணுகிறேன்) சங்கீதத்தில் “டா என்றால் “டு என்று சொல்லத் தெரியாத நான், பாட்டுகள் எப்படிக் கட்டுவது? சில நண்பர்கள் எனக்குக் கூறியபடி, மற்ற நாடகங்களிலிருந்து சமயோசிதமான வர்ணமெட்டுகளை எடுத்துக் கொள்ள என் மனம் கொஞ்சமேனும் இசையவில்லை . இந்தக் கஷ்ட திசையில் எனக்கு ஒரு வழிதான் தோன்றியது. கஷ்டம் நேரிடும் போதெல்லாம் என்னைக் கைகொடுத்துக் கரையேற்றிய என் இரண்டாம் தெய்வமாகிய என் தந்தையிடம் சென்று என் குறையைக் கூறினேன். அவர் உடனே, என் உதவிக்கு வந்து, நாடகங்களுக்கேற்ற பாட்டுகள் கட்ட வல்லமை வாய்ந்த தாயுமானசுவாமி முதலியார் என்பார் தனக்குத் தெரியுமென்று சொல்லி, அவருக்கு ஒரு சீட்டு எழுதி சீக்கிரத்தில் வரவழைத்தார். இவருடன் நான் கலந்து பேசி, புஷ்பவல்லியின் கதையை அவருக்குச் சொல்லி அதற்கு ஏற்ற பாட்டுகளைக் கட்டிக் கொடுக்கும்படி கேட்டேன். அவரும் அதற்கு இசைந்தார். சுகுண விலாசசபையின் நிர்வாக சபையார் ஒவ்வொரு நாடகத்திற்கும் பாட்டுகள் கட்ட அவருக்கு இருபத்தைந்து ரூபாய் கொடுப்பதாகத் தீர்மானித்தார்கள்.

இந்தத் தாயுமான சுவாமி முதலியாரைப் பற்றி எனது நண்பர்கள் அறிய வேண்டியது அவசியம். இவருக்கு