பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/542

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

527




ராஜவேஷதாரியாக வரவேண்டியிருந்தது. நாடக ஆரம்ப முதல், “இந்த மூரி சித்தப்பாக்களுக்கு (பெங்களூர் ஜனங்களுக்கு அவர் வைத்த பெயராகும் இது) நாம் இவ்வளவு கஷ்டப்படுவானேன்? இந்த ரசிகர்களுக்கு எப்படியாடினாலும் ஒன்றுதான்!’ என்று ஏளனம் செய்து கொண்டிருந்தவர், வேண்டுமென்று அலங்கோலமாய் வேடம் தரித்தார். இதை வாசிக்கும் எனது நண்பர்கள், சில கிராமாந்தரங்களில், சில ஏழைகள், இரண்டு மூன்று குரல்களுக்கு, அரிச்சந்திரன், சந்திரமதி முதலிய வேஷங்கள் தரித்து, அவைகளை ஆடவைத்து, வயிறு வளர்ப்பதைப் பார்த்திருக்கக்கூடும். அந்த அரிச்சந்திரன் குரங்கை ஒரு நாய் மீது ஏற்றி, ஊர்வலம் வருவான் குரங்காட்டி. அந்த அரிச்சந்திரன் குரங்கைப்போலவே வேஷம் தரித்துக் கொண்டார் துரைசாமி ஐயங்கார்! இந்த சமாச்சாரம் இவர் வரவேண்டிய காட்சி ஆரம்பமாவதற்குச் சற்று முன்புதான் எனக்குத் தெரிந்தது. “என்ன துரைசாமி! இது என்ன இப்படி வேஷம் தரித்துக் கொண்டாயே!” என்று நான் கேட்டதற்கு, “ஆமாம், உனக்கொன்றும் தெரியாது. நீ இவ்வளவு கஷ்டப்பட்டு ஆக்டு செய்தாயே, என்ன பிரயோஜனம்? இந்த மூரி சித்தப்பாக்கள் ஏதாவது சந்தோஷப்பட்டார்களா? நான் மேடையின்மீது வந்தவுடன் எவ்வளவு சந்தோஷப்படப் போகிறார்கள் பார்!” என்று சொன்னார். நான் என்ன செய்வது? அந்த அலங் கோலத்தைக் களைந்து தக்கபடி வேடம் பூணச்செய்ய அவகாசமில்லை! சரி, ஆகிறது ஆகிறதென்று சொல்லி விட்டு, அக்காட்சியில் ஆட அரங்கத்திற்கு நான் போய்விட்டேன். இக்காட்சி சோககரமான இந்நாடகத்தில் மிகவும் முக்கியமான ஒரு காட்சி. இதில் தன் சிற்றப்பன் தன் தந்தையைக் கொன்றதாகச் சந்தேகப்படும் அமலாதித்யன், அதன் உண்மையை அறியும்பொருட்டு, தன் தந்தையின் அருவத்தின் மூலமாய்த் தெரிந்தபடி, அவர் கொல்லப்பட்ட விதத்தைப்போல் ஒரு நாடகம் தனது சிற்றப்பன் எதிரில் ஆடிக்காட்டி, அவன் முகக்குறிப்பைக் கொண்டு அறிகிறான். இது அமலாதித்யன் வேடம் பூணும் ஒவ்வொருவனும் மிகவும் ஜாக்கிரதையாக நடிக்க வேண்டிய காட்சி. இக்காட்சியில் நான் செய்த ஆபாசத்தை இனிக் கூறுகிறேன். அமலாதித்யன் சிற்றப்பன் எதிரில்