பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/543

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

528

நாடக மேடை நினைவுகள்




மேற்சொன்ன நாடகம் நடிக்கப்படும் வரையில், சரியாக நடித்து வந்தேன்; அந்த நாடகம் ஆரம்பமானதும், எனது நண்பர் துரைசாமி ஐயங்கார், மேற்சொன்னபடி வேஷம் தரித்து அரங்கத்தினுள்ளிருக்கும் சிறு அரங்கத்தில் குரங்குகள் குதிப்பதுபோல் குதித்துத் தோன்றியவுடன், எல்லோரும் நகைக்க ஆரம்பித்தனர். எனக்கும் நகைப்பு வந்துவிட்டது. என்ன அடக்கியும் முடியாமற் போயிற்று. போதாக்குறைக்கு அவர் ஆடிய ஆட்டத்தில், அவர் தலை மீது அணிந்திருந்த கிரீடமானது கீழே விழுந்து விட்டது! உடனே நாடகசாலையெங்கும் ஒரே நகைப்பின் ஆரவாரம் உண்டாச்சுது! நானும் விலாப்புடை நோகச் சிரிக்க ஆரம்பித்து விட்டேன். நான் அமலாதித்யன் என்பதை மறந்து என் சிரிப்பை அடக்க முடியாதபடி அரங்கத்தின்மீது புரண்டேன் என்றே சொல்ல வேண்டும். அக்காட்சி முழுதும் ஆபாசமானது என்று நான் என் நண்பர்களுக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை. இத்தகைய தவறு இதற்கு முன்பு நான் செய்ததில்லை; பிறகும் செய்ததில்லையென்று நிச்சயமாகக் கூறக்கூடும். கற்றறிந்த சிலர் தவிர, நாடகம் பார்க்க வந்திருந்த பாமர ஜனங்களில் பெரும்பாலார், இப்படித்தான் இக் காட்சியில் நடிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டார்களோ என்னவோ! உலகெங்கும் பிரசித்திபெற்ற ஹாம்லெட் என்னும் நாடகத்தில் தான் சிருஷ்டித்த கதாநாயகன் வேடம் பூண்ட ஒருவன், அந்நாடகத்தின் முக்கியமான காட்சியில், இவ்வாறு ஆபாசம் செய்தான் என்று மேலுலகத்திலிருக்கும் ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி என்னை வாழ்த்தியிருக்க மாட்டார் என்பது நிச்சயம். ஆயினும், நான் அப்படி ஆபாசம் செய்ததற்குக் காரணத்தையறிவாராயின், என்னை மன்னிப்பார் என்று நம்புகிறேன்!

பெங்களூரிலிருந்து பட்டணம் திரும்பி வந்து, ஒரு வாரத்திற்கெல்லாம் மாயவரம் புறப்பட்டுப் போனோம். இவ்விடத்தில் ஏழு தமிழ் நாடகங்கள் ஆடினோம். தெலுங்கு நாடகம் இங்கும் ஆட வேண்டுமென்று தெலுங்குப் பிரிவினர் அம்மட்டும் கூறாதிருந்தனர். மாயவரம் சிறிய ஊராயிருந்தபோதிலும் முதல் நாடகம் முதல் சுமாராக ஜனங்கள் வந்தனர். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், முதலில் நாங்கள் தீர்மானித்தபடி நடத்திய ஆறு