பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

533





சகுந்தலா நாடகமானது, சம்ஸ்கிருதத்திலும், தெலுங்கிலும், கன்னடத்திலும், தமிழிலும் நடத்தப்பட்டதேயாம். ஐயாயிரம் மைலுக்கப்பாலிருந்த ‘கட்டெ’ எனும் ஜர்மன் நாடகாசிரியராலும் இதற்கிணையில்லை எனப் புகழப்பட்ட காளிதாச மஹா நாடகக் கவி எழுதிய ‘சகுந்தலா’ என்னும் நாடகமானது, இவ்வாறு எல்லாப் பாஷைகளிலும் ஆடும்படியான மதிப்பைப் பெற்றது ஓர் ஆச்சரியமன்று. தமிழில் ஆடப்பட்ட சகுந்தலா நாடகம், எனது நண்பர் திவான்பஹாதூர் எஸ். பவாநந்தம் பிள்ளை அவர்களால் அச்சிடப்பட்டது. ஹரிச்சந்திர நாடகத்திற் போலல்லாமல், இவர் இந்நாடகத்தில், காளிதாசன் எழுதியபடியே அமைத்திருக்கிறார். இதில் எனதுயிர் நண்பர் சகுந்தலை யாகவும், நான் துஷ்யந்தனாகவும் நடித்தோம். நான் துஷ்யந்தனாக நடித்தபோது பல்லவி, அனுபல்லவி களடங்கிய பாட்டுகளைப் பாடாமற் போனபோதிலும், பல விருத்தங்களைப் பாடினேன். இதற்குக் காரணம் எனக்குத்தாள ஞானம் பூஜ்யம் என்பதை முன்பே அறிவித்திருக்கிறேன்.

1919ஆம் வருஷத்தில் முக்கியமாகக் குறிக்க வேண்டிய விஷயங்கள் அதிகமாயில்லை. இவ்வருஷம் தமிழிலும் தெலுங்கிலும் சிறந்த நாடகங்களுக்குப் பொற்பதக்கம் அளித்ததுபோல், கன்னட பாஷையில் நாடகங்கள் வர வழைக்கப்பட்டு, பூனாவிலிருக்கும் பெர்கூசன் கலாசாலை என். கே. ஹம்பிஹோலி என்பவருக்கு “கஜார்” என்னும் அவர் அனுப்பிய நாடகத்திற்காகப் பொற்பதக்கம் அளிக்கப்பட்டது. சம்ஸ்கிருத பாஷையில் ஒரே நாடகம் வந்தது. அது பொற்பதக்கம் பெறும்படியான அவ்வளவு நன்றாக இல்லை என்று தீர்மானிக்கப்பட்டது. இவ் வருடமும் கிறிஸ்ட்மஸ் விடுமுறையில் விக்டோரியா ஹால் மாடி எங்களுக்குக் கிடைக்காதபடியால், கீழேயே ஒரு சிறிய அரங்கத்தை ஏற்படுத்தி அதில் பத்து நாடகங்கள் ஆடினோம்.

இவ்வருஷம் எங்கள் சபையில் தமிழில் புதிதாய் ஆடிய நாடகம் பி. எஸ். துரைசாமி ஐயங்கார் எழுதிய “வள்ளித் திருமணம்” எனும் நாடகமாகும். அந்நாடகத்தில் அதன் ஆசிரியராகிய பி.எஸ். துரைசாமி ஐயங்காரே, சுப்பிர