பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/564

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

549


இப்பொழுது புறப்படாதீர்கள்!” என்று தடுத்தார். இன்னும் சிலரும் அப்படியே சொன்னார்கள். உடனே திருஞான சம்பந்த ஸ்வாமிகள் கோளறு திருப்பதிகம் பாடின சந்தர்ப்பத்தை நினைத்துக்கொண்டு, ஸ்வாமியிருக்கிறார் புறப்படுங்கள் என்று சொல்லி, நிற்காது நாடக சாலைக்குச் சென்றேன். அந்த நாடக சாலையில் நாடகமானது நன்றாயிராது, ஜனங்கள் அதிகமாய் வராது, ஏதாவது கெடுதியாய் முடிந்திருந்தால், “தும்பினபொழுது புறப்பட்டதனால்தான் இங்ஙனம் நேர்ந்தது. எங்கள் வார்த்தையைக் கேளாமற் போனீரே” என்று என்னை வைதிருப்பார்கள் எனது நண்பர்கள். அன்றைத் தினம் நாடகமானது நன்றாய் ஒரு விக்கினமுமின்றி ஆடப்பட்டது; அன்றியும் நாடகம் ஆரம்பமாவதற்கு ஒரு மணிக்கு முன்பாகக் கொட்டகையில் ஒரு ரூபாய் வகுப்பினர்க்கே இடமில்லையாம். 8 அணா காலரி வகுப்பினரை நெருங்கி உட்காரச் செய்து, வெளியிலிருந்து சில பெஞ்சுகளைக் கொண்டு வந்து போட்டு ஏற்பாடு செய்தார் நாடக சாலை புரொப்ரைட்டர். நான் இதை இங்கு எழுதியதற்கு முக்கியக் காரணம் தெய்வத்தை நம்பி எக் காரியத்தையும் ஆரம்பிப்பவர்கள், இம்மாதிரியான சகுனங்களுக்கெல்லாம் பயப்பட வேண்டியதில்லை என்பதே.

இவ்வூரில் இரண்டு தெலுங்கு நாடகங்கள் ஆடப்பட்டன; இவைகளுக்காகப் பல்லாரியிலிருந்து தெலுங்கு நாடகமாடுவதில் மிகவும் பிரசித்திபெற்றிருக்கும் எனது நண்பர் ராகவாச்சார்லுவை வரவழைத்திருந்தோம். ஆயினும் அவைகளுக்குத் தமிழ் நாடகங்களுக்கு வந்த ஜனங்களில் மூன்றிலொருபங்குகூட வரவில்லை. இதனால் நான் தெலுங்கு நாடகங்களைப்பற்றி ஏதோ இழிவாகக் கூறுகிறேன் என்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் எண்ணக்கூடாது; நான் என் கண் கொண்டு பார்த்த இந்திய ஆக்டர்களுக்குள், எனது நண்பர் ராகவாச்சார்லுவுக்குச் சமானமானவர்கள் இல்லையென்று நான் உறுதியாய்க் கூறக்கூடும்; அன்றியும் அவர் ஆடும் அநேக நாடகங்களில் “ராமராஜு” அல்லது “விஜயநகர சமஸ்தானத்தின் அழிவு” என்னும் நாடகமானது ஒரு மிகச் சிறந்தது என்று எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டியது. அப்படியிருந்தும் அவர் இங்கு