பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/568

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

553


தில்தான், ஆதி முதல் அந்தம் வரை ஒரு குறையுமின்றி எல்லாம் மிகவும் சந்தோஷமாய் முடிந்தது. ஆகவே, எல்லாம் சுலபமாய் முடிந்து கோயமுத்தூரை விட்டுச் சென்னைப் பட்டணம் புறப்பட்ட தினம், எப்படி முடியுமோ என்றிருந்த பாரம் நீங்கினவனாய், “காற்றின் மீது கொஞ்சம் நடந்தேன்” என்று ஒப்புக்கொள்ள வேண்டியதே.

எங்கள் சபைக்குச் சொந்தமாக, ஒரு நாடக சாலையும் இருப்பிடமும் கட்டுவற்காகத் தக்க இடம் வேண்டிப் பல வருஷங்களாகப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்ததற்கு இவ் வருஷம் சென்னை கவர்னர் லார்ட் வில்லிங்டன், அவர்கள் தன் கவுன்சில் மந்திரிகளுடன் ஆலோசித்து எங்கள் சபைக்கு எங்கள் வேண்டுகோளுக்கிணங்கி, நேபியர் பார்க்கில் ஒரு இடம் கொடுக்க இசைந்ததாக, சந்தோஷமான சமாச்சாரம் கிடைத்தது. இதற்காக நான் எடுத்துக் கொண்ட பிரயத்தனமும், பிறகு எங்கள் பிரசிடெண்டாகிய டி. வி. சேஷகிரி ஐயர் அவர்கள் அங்குக் கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் போட்டதும், முடிவில் இந்த இடத்தை கவர்ன்மெண்டாருக்கே நாங்கள் திருப்பிக் கொடுத்த கதையும் பிறகு எழுத வேண்டி வரும்.

இவ் வருஷம், அநேக நாட்களாக எங்கள் சபைக்காக உழைத்து வந்த வெ. வெங்கடாசல ஐயர் அவர்களுக்கு உபகாரமாக ‘மனோஹரா’ என்னும் நாடகத்தை நடத்தி, செலவுபோக மிகுதிப் பணமாகிய ரூபாய் 446-3-0 ஐ அவருக்குதவினோம். இந்த நாடகம் நடத்தியதில் ஒரு விசேஷமுண்டு. விக்டோரியா பப்ளிக் ஹாலின் மேல் மாடியில் இந்நாடகம் நடத்தினால் எங்கள் சபையின் அங்கத்தினர்களுக்கும், வருகிற மற்றவர்களுக்கும் இடம் போதாதென்று கருதினவர்களாய் பீபில்ஸ் பார்க்கின் வடகிழக்கில் கட்டியிருக்கும் ராயல் தியேடர் என்னும் நாடக சாலையில் இதை நடத்தினோம். இதுதான் முதல் முறை எங்கள் சபை சென்னையில் விக்டோரியா பப்ளிக் ஹாலை விட்டு, நாடகக் கம்பெனிகள் ஆடும் நாடக சாலையில் நாடகம் நடத்தியது. மேற் சொன்னபடி மற்ற நாடக சாலைகளில் நாம் ஆடுவது நமது சபையின் அந்தஸ்திற்கு ஏற்றதன்று என்று சிலர் ஆட்சேபித்தனர். வெளியூர்களுக்குப் போயிருந்த பொழுது, நாடகக் கொட்டகைகளில் நமது