பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/573

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

558

நாடக மேடை நினைவுகள்


எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவும், ஒரு பாகமும் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் திடீரென்று மடிந்த விதத்தைக் கேட்டு மனமுருகாத சபை அங்கத்தினர் ஒருவருமில்லையென்றே நினைக்கிறேன்.

இனி, இதை மறக்க முயன்று இவ்வருஷம் நடந்த சந்தோஷகரமான சமாச்சாரங்களை எடுத்து எழுதுகிறேன்.

இவ்வருஷம் எங்கள் சபையின் அங்கத்தினர் தொகை 2000 க்கு மேற்பட்டது. டிசம்பர் மாதம் 31ஆம் தேதி 2105 அங்கத்தினர் இருந்தனர்; 1459 சென்னைவாசிகள், 308 வெளியூர்வாசிகள், 334 ஸ்திரீகள் இதில் அடங்கி இருந்தனர். இத்தொகையானது இதுவரையில் அதிகப்படவில்லை. இவ்வருஷம் முதல் குறைந்து கொண்டே வந்ததே யொழிய அதிகப்படவில்லை ; ஆறுமுக முதலியாருடன் எங்கள் சபையின் லட்சுமி ஒரு கரத்தை இழந்தனள் போலும். இரண்டாயிரம் அங்கத்தினர் சேர்ந்தவுடன், அந்த இரண்டாயிரமாவது அங்கத்தினராகச் சேர்ந்த ஏ. ஆறுமுக முதலியார் என்பவர் இவ் வருஷம் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி, சபைக்கு ஒரு சாயங்கால விருந்தளித்தார்.

இவ்வருஷம் எங்கள் சபையில் புதிதாய் ஆடப்பட்ட தமிழ் நாடகங்கள், அ. சுப்பிரமணிய பாரதியார் எழுதிய மாருதி விஜயம் என்னும் நாடகமும், திவான் பஹதூர் எஸ். பாவநந்தம் பிள்ளை அவர்கள் எழுதிய “பாதுகா பட்டாபிஷேகமுமாம்.” இவற்றுள் முந்திய நாடகமாகிய மாருதி விஜயத்தில், எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு சீதையாக நடித்தபடியால், நான் ஸ்ரீராமனாக நடிக்க வேண்டி வந்தது."நடிக்க வேண்டி வந்தது” என்று யோசித்தே இங்கு வரைந்தேன். ஏனெனில், ரங்கவடிவேலு தான் சீதையாக நடிக்க வேண்டுமென்று விரும்பி, அந்தப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டிராவிட்டால், நான் ஸ்ரீராமனுடைய பாகத்தின் அருகிலும் போயிருக்க மாட்டேன் என்பது திண்ணம். இதற்கு முன்பாகப் பல வருடங்களாக ரங்கவடிவேலு உட்பட எனது பல சினேகிதர்கள, என்னை ஸ்ரீமத் ராமாயணத்தை முற்றிலுமாவது அல்லது சில முக்கியப் பாகங்களையாவது, நாடக ரூபமாக எழுத வேண்டுமென்று நிர்ப்பந்தித்தும், நான் மறுத்து வந்தேன்.