பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/574

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

559


இதற்கு முக்கியக் காரணம், வால்மீகி எழுதிய அவர் திவ்ய சரித்திரத்தைத் தினம் படித்துத் தொழுது வருவதிலிருந்து ஸ்ரீராமருடைய பாகத்தை ஒருவராலும் சரியாக மேடையின் பேரில் ஆட முடியாதென்பது என் துணிபு என்று முன்பே எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கின்றேனென நினைக்கிறேன். இக்காரணம் பற்றி, ராமாயணத்தின் அருகிற் போகமாட்டேன் என்று மறுத்துக் கொண்டுவர, எனதுயிர் நண்பர் “நீங்கள் எழுதாவிட்டால் போகிறது. சுப்பிரமணிய பாரதியார் எழுதியிருக்கிறார் மாருதி விஜயம் என்னும் ராமாயணக் கதையை நாடக ரூபமாக, அதில் நான் சீதையாக நடிக்க விரும்புகிறேன். அதற்காக நீங்கள் ஸ்ரீராமராக நடிக்கவேண்டும்” என்று தொந்தரவு செய்ய, மனமில்லாத போதிலும் இசைந்தேன். இதில் இரண்டு காட்சிகளில்தான் எனக்குப் பாகமுண்டு; அவ்விரண்டு காட்சிகளிலும் கூட நான் நன்றாய் நடிக்கவில்லை என்பது நிச்சயம். உலகத்தவர்க்கு ஓர் உத்தம புருஷனை வர்ணிக்க வேண்டுமென்று வால்மீகி முனிவர் வர்ணித்துள்ள ஸ்ரீராமபிரானைப்போல நாம் எங்கு நடிக்கப் போகிறோம் என்னும் அச்சம் என் மனத்தில் பூரணமாய்க் குடி கொண்டிருக்க, நான் அந்தப் பாத்திரத்துக்குத் தக்கபடி நடிக்க அசக்தனாயிருந்தேன். இந் நாடகமானது மறுபடியும் எங்கள் சபையில் இதுவரையில் என்னாலும் நடிக்கப்பட வில்லை; மற்றெவராலும்கூட நடிக்கப்படவில்லை.

இவ் வருஷம் நான் புதிதாய் எழுதிய நாடகம் “வள்ளி மணம்” என்பதாம். இது எங்கள் சபையின் நாடகங்களுள் ஒரு முக்கிய நாடகமாக மதிக்கப்படுவதனாலும், இந் நாடகத்தினால் எங்கள் சபைக்கு எப்பொழுது ஆடிய போதிலும் நல்ல வரும்படி வருவதனாலும் இதைப்பற்றிச் சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன்.

இதற்குச் சில வருஷங்களுக்கு முன்பாகச் சென்னையில் இந்த வள்ளியின் கதையானது, பல நாடகக் கம்பெனிகளால் ஆடப்பட்டுப் பிரபலமாகி வந்தது. இதைப் பன்முறை பார்த்த எனது ஆருயிர் நண்பர், தனக்காக இக் கதையை நான் நாடக ரூபமாக எழுதித் தர வேண்டும் என்று வற்புறுத்தினார். இவர் சாதாரணமாக நான் ஏதாவது ஒரு நாடகத்தை எழுதி முடித்தால், அது ஆடப்பட்டவுடன்,