பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/576

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

561


ஆசிரியர் அனுமதியின்மீது, இடையிலுள்ள சுப்பிரமணியர் வரும்படியான முக்கியமான மூன்று காட்சிகளை மாத்திரம் என் மனம் சென்றபடி, புதிதாய் எழுதி முடித்தேன். இவைகளை நான் எழுதியவுடன் படித்துப் பார்த்து, மிகவும் நன்றாயிருக்கிறதென மகிழ்ந்து, உடனே நாடகத்தை ஆட வேண்டுமென்று விரும்பினார். நாடகத்தின் இம் மூன்று காட்சிகளையும் எழுதி முடித்தவுடன் இன்னொரு கஷ்டம் ஆரம்பித்தது. முதலிலேயே எனதுயிர் நண்பரிடம் நான் இந் நாடகத்தில் பாட மாட்டேன் என்று சொல்லியிருந்தேன். அப்பொழுதெல்லாம் சும்மா இருந்துவிட்டு, நான் எழுதியானவுடன் அதெல்லாம் உதவாது, நீங்கள் எப்படியும் இந் நாடகத்தில் பாடித்தான் ஆக வேண்டும் இல்லாவிட்டால் எனக்குக் கஷ்டமாயிருக்கும்; நீங்கள் பாடாவிட்டால் தர்க்கப் பாட்டுகளாகிய சுப்பிரமணியருடன் பாட வேண்டிய என் பாட்டுகளை நான் விட்டு விட வேண்டி வரும்” என்று நிர்ப்பந்திக்க ஆரம்பித்தார். என்னால் தாளத்துடன் பாட முடியாது, பிறகு அவமானத்திற்கிடமாகும் என்று நான் எவ்வளவோ சொல்லியும் ஒரே பிடிவாதம் பிடித்தார். வேறெந்த நியாயமும் பயன்படாமற் போகவே, கடைசியில் “நீங்கள் மனம் வைத்தால் எப்படியும் சாதிப்பீர்கள். என் பொருட்டு அவ்வளவு கஷ்டம் எடுத்துக்கொள்ளக் கூடாதா?” என்று கேட்டார். இந்த நியாயத்திற்கு நான் என்ன பதில் உரைப்பது? உடனே பதில் ஒன்றும் சொல்லாமலிருந்து விட்டு, வீட்டுக்குப் போனதும் இவ்வளவு சொல்லும் பொழுது, நாம் முயன்றுதான் பார்ப்போமே என்று தீர்மானித்து, அவர் அறியாதபடி ஏகாந்தமாய் தினம் கஷ்டப்பட்டு நான்கு பாடல்கள் மாத்திரம் தாளத்துடன் சரியாகப் பாடக் கற்றுக் கொண்டேன். இதனுடன் நான்கைந்து விருத்தங்களையும் ராகத்துடன் பாடக் கற்றேன். பிறகு ஒரு நாள் இந் நாடகத்திற்கு ஒத்திகை செய்தபொழுது அவர் பாடியானவுடன் திடீரென்று நானும் தாளத்துடன் என் பாட்டுகளைப் பாட ஆரம்பித்தேன்! அதைக் கேட்டுவிட்டு அவர் கூறிய பதில் இன்னும் என் மனத்தில் குடிகொண்டிருக்கிறது. “திருடு! தாளம் வராது என்று சொல்லிவிட்டு, இப்பொழுது, என்னமாக வந்தது?