பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/579

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

564

நாடக மேடை நினைவுகள்


ஏதாவது விலங்கின் தோலணிந்து, கிரீடத்தை நீக்கி, வேடர் முடியுடனும், ஆபரணங்களை யெல்லாம் கழற்றிவிட்டுக் கை வில்லுடன் தோன்றுவதே நியாயமாகும். அநேக கம்பெனிகளில் சுப்பிரமணியர், முன்பிருந்த கோலத்துடனே, கையில் வில்லை மாத்திரம் எடுத்துக்கொண்டு வருவதைப் பார்த்திருக்கிறேன். அக் கோலத்தில் அவரை சாட்சாத் சுப்பிரமணியர் என்று அறியாத வள்ளி மிகவும் புத்தியற்றவளாய் இருக்க வேண்டும்!

அன்றியும் தற்காலத் தென் இந்திய நாடக மேடையில் இந் நாடகம் நடிக்கப்படும்பொழுது சாதாரணமாக நடக்கும் மற்றொரு பெருத்த ஆபாசத்தை இங்குக் கண்டித்தெழுத விரும்புகிறேன். சுப்பிரமணியர் வேடம் பூண்டவன், அரங்கத்தில் முதலில் தோற்றும் பொழுது, “ஜெய ஜெய கோகுல பால!” அல்லது “நின்னெவரனி” முதலிய கிருதிகளைப் பாடிக்கொண்டு வருவதும் மிகவும் தவறாகும். இக் கிருதிகளைப் பற்றி நான் குற்றமாகக் கூறவில்லை. அக்கிருதிகளை எத்தனை முறை கேட்டாலும் இன்னும் பன்முறை கேட்க விரும்புகிறேன். ஆயினும் சுப்பிரமணியர் வேஷதாரி, அவைகளைப் பாடுவது தவறாகும். அப் பாட்டுகளை அந்த வேஷதாரியிடமிருந்து கேட்க ஜனங்கள் விரும்பினால், காட்சிகளுக்கு இடையிலுள்ள அவகாசத்தில், அந்த வேஷதாரியை, தனியாகத் திரையின் முன்பு வரவழைத்துப் பாடக் கேட்கட்டும். சுப்பிரமணியராக அரங்கத்தில் ஆக்டு செய்து கொண்டிருக்கும் பொழுது இத்தகைய கிருதிகளையெல்லாம் பாடுவது மிகுந்த ரசாபாசமாம் என்பது என் நிச்சயம். தற்காலத்திய நாடக மேடைகளில் நடக்கும் சங்கீத ஆபாசங்களைப் பற்றிப் பிறகு விரிவாக எழுதலாமென்றிருக்கின்றேன்.

இந்த வள்ளி மணம் என்னும் நான் எழுதிய நாடகமானது முதன் முறை நடிக்கப்பட்டபோது, சபையோரால் மிகவும் சந்தோஷத்துடன் ஏற்கப்பட்டது. நான் சீக்கிரத்தில் மற்றக் காட்சிகளையும் என் மனத்திற்கு யுக்தமென்று தோன்றியபடி எழுதி முடித்து இப் புத்தகத்தை மறுவருடம் அச்சிட்டேன். இந் நாடகமானது பன்முறை எங்கள் சபையில் ஆடப்பட்டிருக்கிறது. இது ஆடப்படும் பொழுதெல்லாம் நல்ல பணம் வசூலாகியிருக்கிறது. எங்கள்