பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/580

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

565


சபைக்குப் பணத்தைக் கொண்டு வந்த நாடகங்களில் இது ஒரு முக்கியமானதாம். மனோஹரன், லீலாவதி- சுலோசனா நாடகங்களுக்குப் பின்பாக இதையே கூற வேண்டும். இது ஒன்பது வருடங்களுக்கு முன்புதான் அச்சிட்ட நாடகமாயினும், இதுவரையில் 50 முறைக்கு மேல் ஆடப்பட்டிருக்கிறது. எனது இந் நாடகமானது, நாடகக் கம்பெனிகளால் ஆடப்படுவதில்லை. இதற்கு முக்கியக் காரணம், இக் கதையை அநேக நாடகக் கம்பெனிகளில், பாட்டுகளை மாத்திரம் கற்றுக்கொண்டு வசனம் வாய்க்கு வந்தபடி பேசிக்கொள்ளும் வழக்கமாயிருக்கலாமெனத் தோன்றுகிறது. அன்றியும் பாய்ஸ் கம்பெனிகளில், அவர்களுக்கு வேண்டிய வசனங்களை யாரையாவது கொண்டு எழுதி வைத்துக் கொள்ளுகிறார்கள். இப்படிச் செய்வதனால், நான் எழுதியபடி நடிப்பதென்று என் உத்தரவைப் பெற்று, எனக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் கட்ட வேண்டிய கஷ்டம் அவர்களுக்கு இல்லாதிருப்பதால் அவர்கள் மீது நான் குறை கூறுவதற்கில்லை.

நான் இப்பொழுது நடிக்க விரும்பும் பாத்திரங்களுள் இந்த வள்ளி மணத்தில் வரும் சுப்பிரமணியர் வேடம் ஒன்றாகும். எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலுவுக்கப்புறம் இந் நாடகத்தில் எனதுயிர் நண்பர் கே. நாகரத்தினம் ஐயர் வள்ளியின் வேடத்தில் மிகவும் நன்றாய் நடித்து வருகிறார்.

இவ் வருஷம் கோடைக்கால விடுமுறையில் எங்கள் சபையானது காரைக்குடிக்கும், நாகப்பட்டினத்திற்கும் போய் வந்தது. மே மாதம் 25ஆம் தேதி புறப்பட்டுப் போய், ஜுன் மாதம் 27ஆம் தேதி திரும்பி வந்தோம். இடையில் காரைக்குடியில் ஏழு நாடகங்களும் நாகப்பட்டினத்தில் நான்கு நாடகங்களும் ஆடினோம். இவ்விரண்டு இடங்களிலும் நாங்கள் ஆடிய நாடகங்கள் மிகவும் சிலாகிக்கப்பட்டனவென்றே சொல்ல வேண்டும். அன்றியும் நல்ல தொகையும் வசூலாயிற்று. இந் நாடகங்களில் வந்த மொத்த வரும்படி 9250 - 12 - 6; செலவு 5710 - 14 - 0 போக, மிகுந்த லாபம் 3539 - 14 - 6 ரூபாய், சபையின் கட்டிட பண்டுக்குச் சேர்க்கப்பட்டது. இவ்வருஷத்திய தமிழ் கண்டக்டராகிய வி. வி. தேவநாத