பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/581

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

564

நாடக மேடை நினைவுகள்


ஐயங்கார், எங்களுடன் வருவதற்கில்லாமற் போனபடியால், நான் இந் நாடகங்களுக்குக் கண்டக்டராக நியமிக்கப் பட்டு, அவ்வூர்களில் இந் நாடகங்களை நடத்தினேன்.

செட்டி நாட்டிற்கு எங்கள் சபை போய் அங்கு காரைக்குடியில் நாடகம் ஆட வேண்டுமென்று எங்களை உற்சாகப்படுத்தியவர், நாட்டுக்கோட்டைச் செட்டியார் வகுப்பைச் சேர்ந்த, எனது நண்பராகிய எம். ஆர். எம். ராமசாமி செட்டியாரே. அவரும், கே. எம். ஏ. ஆர். வி. பெத்தாச்சி செட்டியாரும் காரைக்குடியில் எங்களுக்காகச் செய்த உபசாரங்களும், நாடகங்களுக்காக எங்கள் பொருட்டு எடுத்துக்கொண்ட கஷ்டமும் செப்பத்தரமல்ல. தற்போது சென்னையிலிருந்து காரைக்குடிக்கு நேராக ரெயில் போகிறது. 1921ஆம் வருஷம் அப்படிப்பட்ட சௌகர்யம் கிடையாது. நாங்கள் சென்னையிலிருந்து புறப்பட்டுத் திருச்சிராப்பள்ளி போய்ச் சேர்ந்து, அங்கிருந்து ஐம்பது மைலோ அறுபது மைலோ மோட்டார் வண்டிகளில் புதுக்கோட்டை வழியாக, காரைக்குடிக்கும் போகவேண்டி வந்தது. திருச்சிராப்பள்ளியிலிருந்து காரைக்குடிக்கு இவ்வாறு போக, ராமசாமி செட்டியார் அவர்கள், எங்களுக்கெல்லாம் பல மோட்டர் வண்டிகளை ஏற்பாடு செய்திருந்தார். காரைக்குடிக்குப் போய்ச் சேர்ந்த தினம் நேர்ந்த ஒரு சங்கடத்தை இனி தெரிவிக்கிறேன், நாங்கள் ஐந்தாறு மோட்டார் வண்டிகளில் போனபோது, எல்லா வண்டிகளும் நெருக்கமாய்ச் சென்றால், முன் வண்டியின் வேகத்தினால் கிளம்பும் புழுதி, பின்னிருக்கும் வண்டிக்குக் கஷ்டத்தை விளைக்குமென்று, ஒவ்வொரு வண்டிக்கும் இடையில் கொஞ்ச தூரம் விட்டு, ஓட்டச் சொன்னோம். நாங்கள் போன பாதை அவ்வளவு நன்றாக செப்பனிடாதபடியால், அதிவேகமாய்ப் போவதற்கில்லாமற் போயிற்று. அன்றியும் இடையில் புதுக்கோட்டையில் தங்கி, சாயங்காலம் டீ சாப்பிட்டுவிட்டுப் போக வேண்டுமென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்படியே புதுக்கோட்டையில் ம-ள-ௗ - ஸ்ரீ பி. வி. ரகுநாத அய்யர் பி.ஏ. பி.எல்., அவர்கள் வீட்டில் தங்கிப் போனோம். இவ்விடம் அவர் வீட்டில் இல்லாதபோதிலும் அவரது வயோதிகரான தாயார் எங்களுக்கு மிகவும்