பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/582

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

567


உபசரணை செய்தார்கள். இங்கு சற்றுத் தாமதித்துப் போனபடியால், இருட்ட ஆரம்பித்துவிட்டது. எப்படியாவது விளக்கேற்றுமுன் காரைக்குடி போய்ச் சேர வேண்டுமென்று நான் துரிதப்பட்டவனாய், எங்கள் மோட்டார் வண்டியை முன்பு விடச் சொன்னேன். நான் இருந்த வண்டியில் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவும் ராமசாமி செட்டியாரும் இன்னும் யாரோ ஒரு அங்கத்தினரும் இருந்தனர். எங்களுக்குப் பின்னால் வந்த வண்டி ஒன்றில் என் குமாரன் வரதராஜனும் இன்னும் சில ஆக்டர்களும் இருந்தனர். பள்ளத்தூர் போகிறவரையில் ஏறக்குறைய எல்லா வண்டிகளும் ஒருங்கு சேர்ந்து போயின. பிறகு அவ்விடமிருந்து காரைக்குடிக்குப் போக, எல்லா மோட்டார் வண்டி ஓட்டுகிறவர்களுக்கும் வழி தெரியுமென்று எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு எங்கள் வண்டியை வேகமாய் விடும்படிக் கூற, அப்படியே எங்கள் டிரைவர் வேகமாய் விட, காரைக்குடிக்குச் சுமார் ஏழு மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். என் குமாரன் ஏறிய வண்டியும் இன்னொரு வண்டியும் தவிர மற்றக் கார்களெல்லாம் வந்து சேர்ந்தன. ஏழரை மணிக்கெல்லாம் சாப்பாடு தயாராகி இலை போட்டிருந்தார்கள். அவர்களும் வந்தவுடன் எல்லோரும் ஒன்றாய்ச் சாப்பிடலாம் என்று சொன்னோம். எட்டாயிற்று, ஒன்பதாயிற்று, பத்தாயிற்று, பதினொன்றாயிற்று - அந்த இரண்டு கார்களும் வந்து சேரவில்லை! மற்றவர்களை எல்லாம், “நீங்கள் சாப்பிடுங்கள்; அவர்களுடன் நான் சாப்பிடுகிறேன்” என்று சொல்லியும் அனைவரும், அவர்களெல்லாம் வாராமல் சாப்பிட மாட்டோம் என்று மறுத்து விட்டார்கள். எல்லோரும் கவலையுடனும் பசியுடனும் அந்த இரண்டு கார்களின் வரவை எதிர்பார்த் திருந்தோம். போதாக்குறைக்குப் பள்ளத்தூர் வழியாக வந்த வேறு இரண்டு மோட்டார் வண்டிகளில் வந்த மனுஷ்யர்களை விசாரித்ததில், வழியில் எங்களவர்கள் ஏறியிருந்த வண்டிகளைச் சந்திக்கவில்லையென்று கூறினார்கள். எனக்கு மாத்திரம் அல்ல; எல்லோருக்குமே இதனால் கவலை அதிகமாயிற்று. ஒருபுறம், என் புதல்வன் கதி என்னவாயிற்றோ என்கிற பயம்; மற்றொருபுறம், மற்ற ஆக்டர்களுக்கு என்ன ஆபத்து நேர்ந்ததோ என்ற