பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/583

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

568

நாடக மேடை நினைவுகள்


வருத்தம்; பன்னிரண்டு மணிவரையில் தைரியமாய்ப் பொறுத்தேன். அதற்கு மேல் பொறுக்க முடியாமல் முக வாட்டத்துடன் உட்கார்ந்து என் கைகண்ட ஔஷதம் நாடினேன் - எல்லோரும் சவுக்கியமாய் வந்து சேர வேண்டுமென்று பிரார்த்தித்தேன்! ‘கடந்த ஞானியரும் கடப்பரோ மக்கள் மேற் காதல்’ என்றார் பெரியார் ஒருவர். அவர்களுக்கே அப்படியிருக்க, கேவலம் இல்லறத்தில் உழலும் என்போன்ற பேதையர்க்குச் சொல்வானேன்!

பிறகு பன்னிரண்டு மணிக்கு அந்த இரண்டு வண்டிகளும் சாவகாசமாய் வந்து சேர்ந்தன! என்னவென்று விசாரிக்குமளவில், என் குமாரன் ஏறி வந்த வண்டிக்கு ஏதோ தடங்கல் நேரிட, அதைச் சரிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, பாதையை விட்டுப் பள்ளத்தூரில் மோட்டார் வண்டிகள் ரிப்பேர் செய்பவன் வீட்டிற்குப் போய் அதைச் சரிப்படுத்திக்கொண்டு வர இவ்வளவு நேரமாகியதென்றும், அவ் வண்டியைத் தனியாக விட்டு வர மனமில்லாமல், மற்றொரு வண்டியையும் நிறுத்த வேண்டி வந்ததென்றும் தெரிவித்தார்கள். அதன் பிறகு அன்றிரவு ஏறக்குறைய ஒரு மணிக்கு எல்லோரும் ஆறிப்போன உணவை உண்டோம்.

மறுநாள் வெள்ளிக்கிழமை நாங்கள் எல்லோரும் அங்கு ஒரு மைலுக்கப்பாலுள்ள நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களால் கட்டப்பட்ட அழகிய கோயில் ஒன்றுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்தோம். அங்கு நாங்கள் எங்கள் வழக்கப்படி நடத்திய முதல் நாடகம் ‘லீலாவதி - சுலோசனா.’ அன்று சாயங்காலம் நாங்கள் எல்லோரும் வேஷம் தரிக்க ஆரம்பித்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு பெரிய கூடையில், ஏறக்குறைய ஐந்தடி நீளமுள்ள, ஓர் ஆள் தூக்க முடியாத, இரண்டு ரோஜாமாலைகள் கொட்டகைக்கு வந்து சேர்ந்தன. இதென்ன விஷயம்? யாருக்காக இவை வந்தன என்று நான் மெல்ல விசாரித்தபொழுது, எங்களை இவ்வூருக்கு வரவழைத்த செட்டியார்கள், எனதாருயிர் நண்பர் ரங்கவடி வேலுவுக்கும் எனக்கும் போடுவதற்காக, இவைகளைத் தஞ்சாவூரிலிருந்து வரவழைத்ததாகக் கேள்விப்பட்டேன். “சுண்டைக்காய் காற்பணம் சுமைக் கூலி முக்காற் பணம்"