பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/584

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

569


என்றபடி மாலைகளின் செலவு ஒரு பக்கம் இருக்க, அவைகளைத் தஞ்சாவூரிலிருந்து கொண்டுவர மோட்டார் கார் செலவு அதைவிட அதிகம்; ஏறக்குறைய 45 ரூபாய் இதற்காகச் செலவு செய்ததாகத் தெரிந்தது. இருந்தும், மெல்ல அச் செட்டிமார்களுள் பிரதானமானவரிடம் போய், எங்கள் சபையின் கோட்பாடுகளுக்கு இது விரோதமானது. எங்களுக்குள் எல்லா ஆக்டர்களும் சமமாயிருக்க, நாங்கள் இருவர் மாத்திரம் மாலை மரியாதை பெறுவது நியாயமல்ல வென்று கூறிப் பார்த்தேன். அவர் அதற்கிசையாது, நாங்கள் உங்களுக்கு மரியாதை செய்ய வேண்டுமென்று விரும்புகிறோம். இதில் தவறென்னவென்று தர்க்கிக்க ஆரம்பித்தார். அதன் மீது அவர் பிடிவாதமாய்ப் பேசுகிறார் என்று கண்டவனாய், எனது கடைசி நியாயமாக அப்படி எங்களை நிர்ப்பந்திப்பதால், மேடையின்பேரில் இதை வாங்க மாட்டோம் என்று மறுப்போம் என்று சொல்ல வேண்டியதாயிற்று. அதன்பேரில், நாங்கள் இவ்வளவு செலவு செய்து கஷ்டப்பட்டுக் கொண்டு வந்த ரோஜா மாலைகளை என்ன செய்வது என்று அவர் கேட்க, “அவைகளை மிகவும் நன்றாக உபயோகப்படுத்தும் மார்க்கம் நான் சொல்லுகிறேன். அவைகளை அப்படியே கோயிலுக்குக் கொண்டுபோய், ஸ்வாமி, அம்மனுக்குப் போட்டுவிடுங்கள்!” என்று பதில் சொன்னேன். அதன்மீது அவர், நான் சொன்னது நியாயம் என ஒப்புக்கொண்டு அப்படியே செய்தார். இந்தச் சிறிய விஷயத்தைப் பற்றி இங்கு நான் இவ்வளவு விவரமாய் எழுதியதற்கு ஒரு முக்கியக் காரணமுண்டு. ஆமெடூர் சபைகளில், முக்கிய ஆக்டர்களென்றும் முக்கியமல்லாத ஆக்டர்களென்றும் பிரிப்பது தவறு. எல்லோரையும் ஒரே சமமாகப் பாவிக்க வேண்டுமென்பது ஒருபக்கமிருக்கட்டும்; இம்மாதிரி ரோஜா மாலைகளை ஆக்டர்களுக்கு (அவர்கள் எவ்வளவு சிறந்த ஆக்டர்களாயிருந்த போதிலும்) மேடையின் பேரில் போடுவது யுக்தமல்லவென்பது என் அபிப்பிராயம். சாதாரணமாக எல்லா நாடகக் கம்பெனிகளிலும் இது வழக்கமாயிருக்கிறது தற்காலம்; அயன் ராஜபார்ட், அயன் ஸ்திரீபார்ட் என்று சொல்லப்பட்ட முக்கியமான ஆக்டர்கள் மேடையின் மீது தோன்றியவுடன், அவர்கள் எந்த