பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/585

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

570

நாடக மேடை நினைவுகள்


வேஷத்திலிருந்தபோதிலும், என்ன சந்தர்ப்பத்தில் தோன்றிய போதிலும், சபையிலிருந்து அவர்களுக்கு வேண்டியவர்கள், அவர்களைக் கௌரவப்படுத்த வேண்டி ரோஜா முதலிய மலர்களால் ஆகிய மாலைகளைக் கொண்டு போய் அவர்கள் பாட்டையோ, பேச்சையே நிறுத்திப் போடுகிறார்கள். இது பெரும் தவறென்று எனக்குத் தோன்றுகிறது. ஹரிச்சந்திர நாடகத்தில் மயான காண்டம் நடக்கும்; அதில் ஹரிச்சந்திரன் தோட்டியாகத் தோன்றியவுடன் ரோஜா மாலை ஒன்று சரிகைகளுடன் அவன் கழுத்தில் கொண்டுபோய்ப் போடுவது! அல்லது சந்திரமதி தன் ஒரே மகனை இழந்ததற்காக அழுதுகொண்டு வரும் பொழுது மேற்கண்டபடி ஒரு மாலையை அவள் கழுத்தில் போடுவது; இவை எவ்வளவு ரசாபாசமாக இருக்கிறதென இதைப் படிக்கும் எனது நண்பர்களே கவனிப்பார்களாக. மாலை மரியாதை யாராவது ஆக்டர்களுக்குச் செய்ய வேண்டுமென்று விரும்பினால், நாடகக் கடைசியில் செய்வதே தகுதியாம்; அல்லது அதுவரையில் காத்திருக்க முடியாத சந்தர்ப்பமாயிருந்தால், ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் இடையில் ஆக்டர்களை டிராப் படுதாவுக்கு முன்பாக வரவழைத்து, அந்த மரியாதையைச் செய்யலாம். இதையொட்டியே காரைக்குடியில் நாடகங்கள் ஆடினபொழுது, கடைசி நாடகம் ஆனவுடன், எங்கள் சபையிலுள்ள எல்லா ஆக்டர்களையும் அரங்கத்தில் நிற்கச் செய்து, அவர்கள் மனம் கோணாதபடி எல்லோர்க்கும் மாலை மரியாதை செய்ய ஒப்புக்கொண்டேன்.

இங்கு எங்கள் சபை நாடகங்கள் நடத்தியபொழுது எனக்கு விந்தையாகத் தோன்றிய இன்னொரு விஷயத்தை எடுத்தெழுதுகிறேன். இவ்வூரில் இந்த நாடகசாலை வழக்கமென்னவென்றால், ரிசர்வ் வகுப்புக்கு, ரிசர்வ் செய்யும் பெரிய மனிதர்கள் தங்கள் தங்கள் நாற்காலிகளை அனுப்ப வேண்டியதாம்; அதன்படியே எல்லோரும் சாய்வான போல்டிங் நாற்காலிகளை அனுப்பியிருந்தனர் போலும். முதல் நாடகமாகிய, ‘லீலாவதி-சுலோசனா'வில் நான் மூன்றாவது காட்சியில் முதன் முறை மேடையில் தோன்றி, அரங்கத்தைக் கடந்து சென்றபோது ஹாலில்