பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/587

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

572

நாடக மேடை நினைவுகள்


பார்வையை மீட்டுக்கொண்டு தலை குனிந்தவனாய், சற்று அசைவற்று, பிறகு ஒருமுறை சுலோசனை போன பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு, பிறகு தன் நண்பனாகிய கமலாகரனிருக்குமிடம் நாட வேண்டும். நான் இந் நாடகத்தை இதுவரையில் 50 முறைக்குமேல் ஆடிய பொழுதெல்லாம் இம்மாதிரியாகத்தான் நடித்திருக்கிறேன். இதை விட்டு, பட்டிக்காட்டான் ஒருவன் மதுரை மீனாட்சி கோயில் கிழக்குக் கோபுரத்தை கண்கள் பிதுங்க வாயைத் திறந்து கொண்டு அரை நாழிகை பார்ப்பதுபோல், சுலோசனையைப் பார்த்துக்கொண்டிருப்பது பெரும் தவறாகும். இம்மாதிரிப் பல கம்பெனிகளில் ஸ்ரீதத்தனாக நடித்த ஆக்டர்கள் நடித்ததை நான் பார்த்து விசனப்பட்டிருக்கிறேன். ஒருமுறை ஒரு ஆக்டர் இப்படி ஏறெடுத்துப் பார்ப்பது போதாதென்று, சுலோசனை விரைந்து போனவுடன், அங்கிருந்த ஒரு நாற்காலியின் பேரில் ஏறி, அவள் போன திசையை உற்றுப் பார்ப்பதை நான் என் கண்ணாரக் கண்டிருக்கிறேன். ஸ்ரீதத்தனை நான் சிருஷ்டித்த பொழுது அவனை இவ்வளவு மடையனாக்க முடியும் என்று கனவிலும் நினைத்தவனன்று. இனியாவது ஸ்ரீதத்த வேஷதாரிகள் இம்மாதிரியாக ரசாபாசம் செய்யாதிருக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

இவ்விடத்தில் நாங்கள் ஆடிய இரண்டாவது நாடகமாகிய ‘மனோஹரன்’ நாடகத்தில் நான் மனோஹரனாக நடித்த பொழுது நேர்ந்த ஒரு சங்கதியை எழுதுகிறேன். இந்நாடகத்தில் இரண்டாவது காட்சியில் மனோஹரன் வசந்தசேனை தன் தாயாரை வைததற்காகக் கோபித்து அவளை வெட்டப்போகும் தருவாயில், அவன் தந்தையாகிய புருஷோத்தமன் தடுக்க, அவன் கரத்தினின்றும் திமிறிக் கொள்ளும் பொழுது, “உமது பத்தினியின் மானத்தை நீர் காப்பாற்றாவிட்டால், என் தாயாரின் மானத்தை நான் காப்பாற்றுகிறேன்” என்று கூறி அவ் வசந்தசேனையின் சென்னியைச் சேதிக்கப் போகிறான். அவ்வார்த்தைகளை நான் கூறி நடித்தபொழுது எல்லோரும் நிசப்பதமாயிருக்க, ஒரு செட்டியார் மாத்திரம் ‘பேஷ்’ என்று உரத்த சப்தமாகக் கூறினார். நான் அரங்கத்தில் நடித்த பல தருணங்களில் ஆயிரக்கணக்கான நபர்கள் அதை மெச்சிக்