பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/589

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

574

நாடக மேடை நினைவுகள்


யுனிவர்சிடி” என்கிற கல்விச் சங்கத்தைச் சிதம்பரத்தில் ஏற்படுத்தி, தமிழுக்கும் தமிழர்க்கும் பல உதவிகள் செய்து வரும் வள்ளலாகிய சா.ம.ம.அ. அண்ணாமலை செட்டியார் அவர்கள் தன் ஊராகிய கானாடுகாத்தானிலிருந்து வந்திருந்தார். அவர் இவ்வாறு எங்கள் சபையை உற்சாகப்படுத்தியதுமன்றி, சபையோரெல்லாம், ஒருநாள் சாயங்காலம் தனது வீட்டிற்கு வரவழைத்துப் பெரும் விருந்து செய்து வைத்தார். செட்டிமார்கள் செய்யும் உபசாரமும் விருந்தும் இத்தன்மையது என்று அறிய விரும்பினால், அதை நேரில் அனுபவித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். அது செப்பத் தரமல்ல. சாயங்காலச் சிற்றுண்டியாக எங்கள் ஒவ்வொருவர் இலையிலும் படைத்திருந்த பலஹாரத்தை ஒன்பது பெயர் சாப்பிட்டு மிகுதியாயிருக்கும்! இதைவிடப் பெரிய விருந்தை நானும் எனது சபை நண்பர்களும், திருவாங்கூர் போயிருந்த பொழுது மஹாராஜாவின் அரண்மனையில்தான் ஒருமுறை சாப்பிட்டிருக்கிறோம். (அதைப் பற்றிப் பிறகு நான் அவ்வூருக்குச் சபை போயிருந்த பொழுது நடந்த சங்கதிகளை எழுதுங்கால் தெரிவிக்கிறேன்.)

எனது வள்ளி நாடகமானது இங்காடப்பட்ட பொழுது, அது நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களுள் பலருடைய குல தெய்வத்தின் கதையாகையால், அவர்களால் மிகவும் ஆதரிக்கப்பட்டது. ஆயினும் அந்நாடகம் கொஞ்சம் சிறிதாயிருந்தது. சீக்கிரம் முடிந்து விட்டது என்று சிலர் கூறினர். இதன் பொருட்டு, மறு நாடக தினம் மார்க்கண்டேயர் நாடகமாடியபொழுது ஊர்வசியின் சாபத்தினின்றும் இரண்டு மூன்று முக்கியக் காட்சிகளையும் ஆட வேண்டி வந்தது.

இவ்வூரில் நாங்கள் நடத்திய கடைசி ஆட்டத்தின் முடிவில் இவ்வூராரால் எங்கள் சபை மெச்சப்பட்டு ஒரு வந்தனோபசாரப் பத்திரம் அளிக்கப்பட்டது. இவ்வூரை விட்டு நாங்கள் நாகப்பட்டணம் போவதற்குள் கொத்த மங்கலம் கா. மா. ஆ. ரா. லா. பெத்தாச்சி செட்டியார், தேனிப்பட்டி சொக்கலிங்கச் செட்டியார், மா. ரா.மா. ராமசாமி செட்டியார் முதலியோர் எங்களுக்கு விருந்துகள் அளித்தனர்; அவர்களனைவரும் எங்கள் சபைக்காகச்