பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

நாடக மேடை நினைவுகள்


வந்தேன். இதைப் பற்றிச் சிலர் அவ்வளவாக சிலாக்கியமான மார்க்கம் அல்லவென்று கூற இடமுண்டு. அப்படி அவர்கள் கூறுவது முற்றிலும் தவறு என்று நான் கூறமாட்டேன். ஆயினும் அநேக விதங்களில் யோசித்துப் பார்க்குமிடத்து, இதனால் பெரும்பலன் உண்டென்று உறுதியாய் நம்புகிறேன். அன்று ஆரம்பித்த இவ்வழக்கத்தை இன்றளவும் விட்டவனல்ல. புராண கதைகள், சரித்திர சம்பந்தமான கதைகள் இவை போன்றவைகளில் இம்மாதிரிச் செய்வது கூடாமைதான். ஆயினும் கேவலம் கற்பனைக் கதைகளடங்கிய நாடகங்களில் இம்மாதிரி செய்வது அவைகள் பிறகு நாடக மேடை ஏறுங்கால் நன்றாய் நடிக்கப்படுவதற்கு மிகவும் அதுகுணமாயிருக்கிறதென்றே உறுதியாய் நம்புகிறேன்.

ஆகவே, நிர்வாக சபையார் கூட்டத்தில் இன்னின்னாருக்கு இன்னின்ன வேஷம் கொடுக்க வேண்டுமென்று யோசித்த பொழுது, ஒவ்வொரு பாத்திரத்தின் பெயரைக் கூறி அதை இன்னாருக்குக் கொடுத்தால் நலமாயிருக்குமென்று சொல்லிக் கொண்டு வந்தேன். அவர்களும் சரி சரியென்று ஒப்புக் கொண்டு வந்தனர். நான் எனக்காக எழுதிய பாத்திரமாகிய சத்யவந்தன் வேடத்தை யாருக்குக் கொடுப்பது என்கிற கேள்வி வந்தபொழுது, நான் மௌனமாயிருந்தேன். அக்கூட்டத்திலிருந்த பெரும்பாலர் அதை நீ எடுத்துக்கொள்ளுகிறதுதானே என்று சொன்னார்கள். அவர்கள் பக்கமாக உட்கார்ந்திருந்த வரதராஜுலு நாயகர் என்பவர் மாத்திரம், அப்பாத்திரம் தனக்குக் கொடுக்க வேண்டுமென்று கேட்டார். அதன்மீது எனக்காக நான் எழுதிய பாத்திரம் அது என்று வெளிப்படையாய்ச் சொல்ல வெட்கப்பட்டவனாய், அப்பாத்திரம் 17 அல்லது 18 வயதுடைய சிறு பிள்ளையாயிருக்க வேண்டுமே என்று ஆட்சேபித்தேன். அதன்மீது அவர் “எனக்கென்ன வயதாகிவிட்டது என்று நினைக்கிறாய், எனக்கு வயது 28 தானே” என்றார். அந்த ஆட்சேபணை வரையில் அவர் கூறியது நியாயம்தான் என்று, இப்பொழுது அந்த 28க்கு இரட்டிப்பாக 56க்கு மேல் எனக்கு வயதானபிறகுதான் தெரிகிறது. அப்பொழுது தெரியாமற் போய் விட்டது! சுயநன்மையைக் கருதும்பொழுது, ஒருவனுடைய அறிவெல்லாம் அவனைவிட்டு அறவே அகலுகின்ற தென்பதற்கு என்னைவிட வேறு உதாரணம் வேண்டுமோ? அக்காலத்தில்