பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/590

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

575


செய்த உதவியின் பொருட்டும், மரியாதையின் பொருட்டும் எங்கள் சபையும் நானும் மிகவும் நன்றியறிதலுடையவர்களா யிருக்கிறோம் என்பதை இதனால் தெரிவித்துக் கொள்கிறேன்.

காரைக்குடியை விட்டுப் பிரிய மனமில்லாமல் பிரிந்து வண்டி மூலமாக, அறந்தாங்கி போய்ச் சேர்ந்து அங்கிருந்து மறுநாள் நாகப்பட்டணம் போய்ச் சேர்ந்தோம்.

இவ்விடத்தில் சர் அகமத் தம்பி மரக்காயர் மூத்த குமாரனான ஏ.கே.எம். மெர்ஹியதீன் மரக்காயர் எங்கள் சபைக்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்து வைத்திருந்தார்.

இவ்வூரில் நாங்கள் நாடகங்களாடிய நாடகசாலை கொஞ்சம் சிறியது; ஆயினும் மற்ற விஷயங்களிலெல்லாம் சௌகரியமாகத் தானிருந்தது. இங்கு நாங்கள் நடத்திய நான்கு நாடகங்களில் முதல் நாடகமாகிய மனோஹராவில் ஒரு பெரும் விபத்து நேரிடவிருந்தது. இரும்புச் சங்கிலிக் காட்சியில், நான் அவைகளை அறுத்துக்கொண்டு, புருஷோத்தம ராஜனை வெட்ட வாளை வீசியபொழுது, வாளின் பிடி மாத்திரம் என் கையில் நிற்க, கத்தி பாகமானது பிடுங்கிக் கொண்டு, சபையோர் மத்தியில் போய் வேகமாய் விழுந்தது. அன்றைத் தினம் போலீஸ் உத்தியோகஸ்தராயிருந்த ஒரு வெள்ளைக்காரருடைய மனைவி, தமிழ் நன்றாய்ப் பேச உணர்ந்த மாது, இந்த நாடகத்தைப் பார்க்க வந்து ஹாலில் உட்கார்ந்திருந்தார்கள்; அவர்கள் மடியில் போய் விழுந்தது! உடனே சபையில் பெரும் ஆரவாரம் உண்டாயிற்று. நான் அதைக் கவனிப்பதா, நான் நடிக்க வேண்டியதைக் கவனிப்பதா? “ஆகிறது ஆகிறது, ஸ்வாமி இருக்கிறார், பார்த்துக் கொள்வோம்” என்று எண்ணி, நான் நடிக்க வேண்டிய பாகத்தின்மீது கவனமுடையவனாய், அருகிலிருந்த ஒரு ஆக்டரின் மரக்கத்தியைப் பிடுங்கிக் கையில் வைத்துக்கொண்டு, அக்காட்சியில் நான் நடிக்க வேண்டிய என் பாகத்தை முடித்தேன். காட்சி முடிந்த பிறகு, டிராப் படுதா விட்டவுடன், வெளியில் வந்து மேடையின் மீதிருந்து, அந்த அம்மாளை விசாரித்து, தெய்வா தீனமாய் காயமொன்றும் படவில்லை என்று கண்ட பிறகே