பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/591

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

576

நாடக மேடை நினைவுகள்


என் அச்சம் நீங்கியது! வேகமாய் விழுந்த கத்தி தெய்வ கடாட்சத்தினால் பக்கவாட்டில் விழுந்தது; செங்குத்தாக விழுந்திருக்குமாயின், அவர்களை நன்றாய்க் காயப்படுத்தியிருக்குமென்பதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. இது நடந்த பிறகு இந் நாடகத்தில் நான் நடிக்கும் போதெல்லாம், ஆரம்பத்திலேயே கத்தியானது பிடியை விட்டு வராமலிருக்கிறதா என்று இழுத்துப் பார்த்துக் கொள்ளுகிறது வழக்கம்.

இவ்விடத்திலும் மார்க்கண்டேயர் நாடகம் ஆடிய பொழுது, அந்நாடகம் கொஞ்சம் சிறிதாயிருந்தபடியால், ஊர்வசியின் சாபத்திலிருந்து இரண்டொரு முக்கியமான காட்சிகளைச் சேர்த்து எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவும் நானும் ஆடினோம். கடைசி நாடகமாகிய வள்ளி மணமும் சீக்கிரம் முடிந்துவிட்டால் வந்திருக்கும் ஜனங்களுக்கு அதிருப்தியாயிருக்குமென்றெண்ணி, நான் எழுதிய “பேயல்ல பெண்மணியே” என்னும் நாடகத்தின் இடைக் காட்சிகளைச் சேர்த்து ஆடினோம். இது ஜனங்களுக்கு ரமிக்கவில்லை. “என்னடா இது, தெருக்கூத்து போல ஆடுகிறார்களே” என்று எண்ணினர். அதற்காக நாடகத்தின் கடைசியில், தெருக்கூத்துகளிலுள்ள ஆபாசங்களை எடுத்துக்காட்டவே அக்காட்சிகள் ஆடப்பட்டன என்று சபையோர்க்குத் தெரிவிக்க வேண்டி வந்தது.

இவ்வூரில் எங்கள் நாடகங்கள் நன்றாய் ஆதரிக்கப் பட்டன. ஜனங்களும் அதிகமாய் வந்திருந்தனர். ஆகவே இவ்வூரைவிட்டுப் பட்டணம் திரும்பியபொழுது சந்தோஷமாகத்தான் திரும்பினோம். நான் இவ்வூருக்கு, பிறகு இரண்டொரு முறை போயிருந்தபோது, விசாரித்ததில், நாங்கள் ஆடிய நாடகக் கொட்டகையில் ஏதோ “சினிமா” வந்து சேர்ந்ததாகக் கேள்விப்பட்டேன். வெளியூர்களில் நான் ஆடிய நாடகக் கொட்டகைகளை, மறுபடி சாதாரண காலத்தில் போய்ப் பார்ப்பதில் எனக்கு ஒரு திருப்தி; அந்தத் திருப்தியை இங்கு அடைவதற்கில்லாமற் போயிற்று.

இவ்வருஷம் எங்கள் சபையின் தெலுங்குப் பிரிவினர் தெலுங்கில் “ராமதாஸ்” என்னும் நாடகத்தை நடத்தினர். இந்நாடகம் எங்கள் சபைக் காரியதரிசிகளில் ஒருவராய் அச்சமயம் இருந்த எனது நண்பர் டி. வெங்கடரமணையா