பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/592

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

577


என்பவரால் எழுதப்பட்டது. இந்நாடகம் தெலுங்குப் பிரிவினர் எங்கள் சபையில் நடத்திய நல்ல நாடகங்களில் ஒன்றாகும். இந்நாடகத்தில் ஒரு காட்சியில் சீதாப் பிராட்டியாகவும், ஸ்ரீராமராகவும் வரும்படி, எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவையும் என்னையும் கேட்டுக் கொண்டார். அதற்கிசைந்து அவ்வாறே நடித்தோம். நாங்களிருவரும் வரும் காட்சி நாடகத்தின் கடைசியில் வருகிறது. 5½ மணிக்கு நாடகம் ஆரம்பித்தால், 8½ மணிக்கு எங்கள் காட்சி வரும். நாங்கள் ஆக்டு செய்யும் காட்சி முழுதும் 5 நிமிஷம்கூட இருக்காது. இதில் எனது நண்பருக்குப் பத்துப் பதினைந்து வரிகளும் இரண்டு பாட்டுகளும் உண்டு. எனக்குப் பத்து பதினைந்து வரிகள் இருக்கும். இதற்காக மத்தியானம் 1 மணிக்கு வேஷம் போட்டுக்கொள்ள ஆரம்பித்து, நான்கு மணி சாவகாசம் மற்றவர்களுக்குக் கஷ்டம் கொடுத்து, பிறகு வேஷம் போட்டுக் கொண்டானவுடன் மூன்று மணி நேரம் அக்காட்சி வரும் வரையில் காத்துக் கொண்டிருக்க வேண்டியது! நடிப்பது 5 நிமிஷமான போதிலும், வேஷம் போட்டுக் கொள்ளும் கஷ்டத்திற்குக் குறைவில்லை! வள்ளி மணத்தில், நான் சுப்பிரமணியர் வேடம் பூண்ட கஷ்டத்தை முன்பே வரைந்திருக்கிறேன். அதைப்போலவே சற்றேறக் குறைய இதில் ஸ்ரீராமர் வேடம் பூணுவதும் மிகவும் கஷ்டமேயாம். போதாக் குறைக்கு முகத்திலும் கைகால்களிலும் நீல வர்ணம் பூசிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நீலமேக ஸ்யாம ராம் ராமனாகத் தோன்ற வேண்டி, “அரை நாள் கூத்தாடுவதற்காக ஆறுமாசத்திய மீசையை அழித்துக் கொண்டானாம்” என்று பழமொழியுண்டு. அதுபோல, “நான்கு வரிகள் பேசுவதற்காக நான்கு மணி நேரம் வேடம் போட்டுக் கொண்டானாம்” என்று சொல்லலாம். இந்த வேஷம் போட்டுக் கொள்வது ஒரு கஷ்டமிருக்க, அதை நாடகமானவுடன் அழிப்பது மற்றொரு பெருங் கஷ்டமாம்! அதிலும் நீலவர்ணத்தைப் போக்க, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது போல், உடம்பெல்லாம் எண்ணெயிட்டு நன்றாகத் தேய்த்தும் பிறகு சோப் போட்டு கழுவினால் தான் அவ்வர்ணம் போகும்!

இந்த ராமதாஸ் நாடகத்தை எனதுயிர் நண்பர் அந்திமக் காலம் வரையில், எப்பொழுது எங்கள் சபை போட்ட போதிலும், மேற்சொன்னபடி அவரும் நானும், சீதையும்